எம்.எஸ்.எம்.ஸாகிர்
இன்று தம்புள்ளையில் எழுந்துள்ள மிகவும் பயங்கரமான சூழ்நிலையையிட்டு அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடி நடவடிக்கை எடுத்து முஸ்லிம்களுடைய பள்ளிவாசல்களுக்கும் இருப்பிடங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்துகின்ற இன விரோத சக்திகளுக்கெதிராக அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வற்புறுத்த வேண்டும்.
இப்படி அரசாங்கம் செய்யாத பட்சத்தில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்களும் உடனடியாக தங்களது பதவிகளை விட்டு வெளியேற வேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு அறிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அநியாயமாக பொய் வதந்திகளைப் பரப்பி முன்னைய மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்குவதற்கு அரசில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்ற பொதுத் தேர்தலின் போது மூட்டை கட்டிக் கொண்டு பிரசாரம் செய்தனர். முஸ்லிம்களும் அவர்கள் சொன்ன வார்த்தைகளை நம்பி நல்லாட்சி எனும் இந்தப் பொல்லாட்சிக்கு வாக்களித்தனர். இது உண்மையிலே முஸ்லிம்களுக்கு எதிரான பொல்லாட்சியாக உருமாறி இருப்பதையிட்டு முழு நாட்டிலுள்ள முஸ்லிம்கள் இப்போது கொதித்தெழுந்துள்ளனர். அன்று நோன்பு பிடித்து, தஹஜ்ஜத் தொழுது, குனூத் ஓதி, மைத்திரி - ரணில் ஆட்சியை பதவிக்குக் கொண்டுவர, தியாக உணர்வுடன் முயற்சிகளை எடுத்த இவர்கள், இன்று முஸ்லிம்களின் மத்தியில் குற்றக் கூண்டில் ஏறி நிற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். எனவே அன்று மஹிந்த அரசில் நடைபெறாத பயங்கரமான செயற்பாடுகள் இந்த அரசின் கீழ் நடந்து கொண்டிருப்பது குறித்து இன்னும் கண்மூடிக் கொண்டு முஸ்லிம்கள் வாழாவிருக்க முடியாது என்பதை மிகவும் அழுத்தமாக நாங்கள் குறிப்பிட வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் கீழ் இனவாதம் எவ்வளவு தூரத்துக்கு மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பது இன்று தம்புள்ளையில் நடைபெறுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மூலம் நன்றாக வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றது. எனவே இந்த அரசாங்கம் உண்மையாக நேர்மையான அரசாங்கம் என்றால், முஸ்லிம்களும் இந்த நாட்டு பிரஜைகள் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களேயானால் இந்த அடாவடித்தனத்தை நிறுத்துவதற்கு அரசாங்கத்தினால் நிச்சயமாக முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே இது ஏனைய இடங்களுக்கும் பரவாமல், ஏனைய இடங்களில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கின்ற உயிர் ஆபத்து எச்சரிக்கைகளையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அப்படிச் செய்ய வேண்டுமென முஸ்லிம் அமைச்சர்களும், அரசாங்கத்திலுள் ள அரச பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும். அவர்கள் தங்கள் மத்தியில் இருக்கின்ற கட்சி உட்பூசல்களை, பிளவுகளை, சச்சரவு களை மறந்து புனித பள்ளிவாசல்களைக் காப்பதற்கும், முஸ்லிம்களுடைய உயிர் உடைமைகளைக் காப்பதற்கும் முன் வர வேண்டிய தருணம் இது என்பதையும் நாங்கள் அடித்துக் கூறுகின்றோம் என்றும் முன்னாள் அமைச்சர் அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.