ஆட்சியாளர்களை வீட்டிற்கு துரத்த வேண்டிய அவசியம் தோன்றியுள்ளதை நாம் உணர்ந்துள்ளோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 15 பிக்குகள் சங்கத்தை திரட்டிக்கொண்டு தற்போதைய ஆட்சியாளர்களை என கடும்போக்கு பெளத்த அமைப்புகளான பொதுபல சேனா, ராவணா பலய, சிங்கள ராவய, தாதியர் சங்கம் ஆகிய சிங்கள அமைப்புக்கள் ஒருமித்து சூளுரைத்துள்ளன.
நாரஹேன்பிட்டி அபயராம விஹாரையில் நேற்று இடம்பெற்ற மேற்படி அமைப்பினைச் சேர்ந்த பிக்குகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு சூளுரைத்தார்கள்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று நாங்கள் மிக வேதனையுடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றோம். நாம் கல்வி கற்ற காலத்தில் ஒரு கவிதையில் குழந்தையில்லாத ஒரு பெண்ணால் தாயின் பிரசவ வலியினை அறிந்துகொள்ள முடியாது எனக் கற்றுள்ளோம். அவ்வாறான நிலைமைதான் இன்று எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. அதனையிட்டே நாங்கள் வருந்துகின்றோம்.
2014 ஆம் ஆண்டுகளில் நாம் எமக்கான மரண சான்றிதழ்களை கையில் வைத்துக்கொண்டிருந்தோம். அது தீவிரவாதம் நாட்டிற்குள் உச்ச நிலையை அடைந்திருந்த தருணமாகும். ஆனால் அத்தகைய அச்சுறுத்தலான சூழலுக்கு முகம்கொடுத்தும் கூட நாம் யுத்தத்தினையும் வெற்றிகொண்டோம்.
அவ்வாறு யுத்தத்தினை வெற்றிகொள்ள முன்னிலையிலிருந்த அரசியல் தலைமைத்துவங்களில் விமல் வீரவன்ச குறிப்பிட்டுக் கூறக்கூடியவராவார். நாடு பற்றிய உணர்வுள்ளவர், உள்ளார்ந்த அடிப்படையில் தேசப்பற்றுள்ள அரசியல்வாதியாவார்.
ஆனால் இன்று நாட்டில் இருக்கின்ற தலைமைகள் யுத்தத்தின் போது தொப்பிகல பகுதியை ஒரு தனிக்காடு. அதனுள் யார் வேண்டுமானாலும் யுத்தம் செய்யலாம் என்று கூறியவர்களே இன்று நாட்டில் ஆட்சிபுரியும் தலைமைகளாக உள்ளனர்.
அதனால் நாட்டில் ஒரு யுத்தமே இடம்பெறவில்லை என்பது போன்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின் றார்கள். நல்லாட்சி என்பது அழகான பெயராக இருந்தாலும் ஆட்சியளார்களின் செயற்பாடுகள் அழகானதாகவும் தூய்மையானதாகவும் இல்லை.
இன்று காட்டில் விறகு திருடும் முதியவருக்கு அமுல்படுத்தப்படும் சட்டம், காத்தான்குடியில் இதுதான் எங்கள் சட்டம் என்று கூறிக்கொண்டு இளைஞர்களை அடித்துக்கொல்பவர்களுக் கும் தேசிய வனத்திலுள்ள மரங்களை வெட்டியழிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் அமுல்படுத்தப்படுவதில்லை .
அதேபோல் மறுபுறத்தில் மத்திய வங்கி விவகாரத்தில் இந்த ஆட்சியாளர்களின் செயற்பாடானது ஆடையின்றி இருப்பவன் ஒருவன் மற்றவனை பார்த்து ஆடையணியாமல் உள்ளான் என்று கேளிக்கை செய்வது போன்றுள்ளது. நாட்டின் பிரதமர் பெயரும் இந்த விவகாரத்தில் பேசப்படுவது வெட்கத்துக்குரிய செயலாகும்.
இவ்வாறான ஓரு அரசாங்கத்தில் வடக்கு கிழக்கில் இராணுவம் முடக்கப்பட்டுள்ளது. அதனால் புலிகள் உட்பட தமிழ் பிரிவினைவாத சக்திகள் சகலரும் சர்வதேசம் வரை சென்று செயற்பட ஆரம்பித்துள்ளனர். ஆகவே இந்த ஆட்சி நீடித்தால் இலங்கையும் லிபியா, சூடான் ஆகிய நாடுகள் போலாகிவிடும்.
ஆட்சியாளர்கள் ஆண்கள் என்றால் நேரடியாக மோதலாம். இவர்கள் இரண்டும் கலந்த ஒரு பிறப்பு என்பதால் அவர்களை தாக்குவது கடினமாகும். அவர்கள் தாக்கிய பின்பே எமக்கு வலிக்கின்றது. அவர்கள் தாக்குதல் நடத்தும் முறைமையையும் அறிய முடியவில்லை என்றார்.