நாங்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களைப் பொருத்தமான இடங்களிலே நிர்மாணித்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களிலும் பன்சலைகளுக்கு அருகிலும் பள்ளிவாசல்கள் அமைவதனாலேயே இரு சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகின்றன.
இனமோதல்களுக்கும் காரணமாகின்றன என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஞானசார தேரர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது, பௌத்த புனித பூமிப் பிரதேசங்களில் பள்ளிவாசல்களோ, கோயில்களோ அமைந்திருக்கக்கூடாது. இது தம்புள்ளை புனித பூமி பிரதேசத்துக்கு மாத்திரமல்ல, நாட்டிலுள்ள அனைத்து புனித பூமி பிரதேசங்களுக்கும் பொருந்தும்.
தம்புள்ளையில் புனித பூமியில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். புனித பூமி பிரதேசங்களில் அமைந்திருக்கும் பன்சலைகளில் பிரித் ஓதும் போது முஸ்லிம் பள்ளிவாசல்களின் பாங்கு சத்தம் பிரித்தைவிட சப்தமாக கேட்கிறது. இதனால் பௌத்த மக்கள் கோபத்துக்குள்ளாகிறார்கள். முஸ்லிம்கள் மீது வெறுப்புக்குள்ளாகிறார்கள். இது மக்களின் சகவாழ்வுக்கு உகந்ததாக இல்லை.
நான் வாழும் நாவல பிரதேசத்தில் பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதியில் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு வரும் முஸ்லிம்களின் வாகனங்களினாலும் வாகனங்கள் தரித்து வைக்கப்படுவதாலும் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்குள்ளாகிறார்கள்.
இதனாலேயே பள்ளிவாசல்கள் பொருத்தமான இடங்களில் ஏனைய சமூகங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு அரசாங்கம் காணி வழங்குவதாகக் கூறினால் பேரம் பேசிக் கொண்டிருக்காது பள்ளிவாசலை இடம்மாற்றிக் கொள்ள வேண்டும்.
கிழக்கில் முகுது விகாரையைச் சுற்றி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். விகாரைக்கு அருகில் பள்ளிவாசலும் இருக்கின்றது. இது இன நல்லுறவுக்குப் பாதகமாக அமையலாம். எனவே பள்ளிவாசல்கள் பொருத்தமான இடங்களிலே நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றார்.