அரசாங்கம் தயாரித்து வரும் புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறை, முஸ்லிம் தனியார் சட்டம், தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பான நகர்வுகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கலந்துரையாடி தீர்மானமொன்றினை நிறைவேற்றிக் கொள்ளவுள்ளனர்.
இந்தத் தீர்மானங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படுமெனவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று கூட்டும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.
இந்நகர்வுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வருவதுடன் நல்லாட்சியைப் பலப்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் மத்தியில் கடந்த காலங்களில் நிலவிய பீதி அகன்று இன்று மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூக நலனை மையமாகக் கொண்டு செயற்பட வேண்டும்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் பல வருடங்களாக தீர்க்கப்படாதிருக்கிறது. பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்தும் அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே உடனடியாக அப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டியுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாட வேண்டியுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு நாட்டில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நல்லுறவினையும் ஏற்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இவ் வேலைத்திட்டங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊர் மக்களும் சிவில்சமூக அமைப்புக்களும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
நாட்டில் அபிவிருத்தியிலும் தேசிய ஒருமைப்பாட்டிலும் நாம் அனைவரும் பங்காளர்களாக வேண்டும் என்றார்.