Top News

பிரதியமைச்சர் அமீர் அலிக்கு கல்குடா பொதுமகனின் பகிரங்க மடல்




அன்புள்ள பிரதியமைச்சர்   அவர்களே  நீங்கள்   இற்றைக்கு 13 வருடங்களுக்கு முன்னர்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம்  அரசியல் முகவரி பெற்றீர்கள்.
உங்கள் அரசியல் பயணமும் 13 வருடங்களைத்  தாண்டியது என்பதில்  உங்களுக்கோ யாருக்கோ கருத்து முரண்பாடுகள் இருக்குமென்று நம்பவில்லை.

இத்தனை வருட காலத்துக்குள் மாகாண சபையில்  மாத்திரமல்ல  அரசாங்கத்திலும்  நீங்கள்  அமைச்சுப் பொறுப்புக்களையும்  வகித்ததுடன் பல வருடமாக  அரசியல்  நீரோட்டத்தில்  பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடனும்  தொடர்புகளைக்  கொண்டிருக்கின்றீர்,

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் பதவியையும்  தற்போது நீங்கள்  வகித்துக் கொண்டிருக்கீன்றீர்கள்,
கல்குடா தொகுதியில் பிறந்தவன் என்ற ரீதியிலும் கிழக்கைச் சேர்ந்தவன் என்ற ரீதியிலும்  எனக்கு சில விடயங்களை உங்களுக்கு தௌிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது.

அண்மையில் பத்திரிகையொன்றில்  நீங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தொடர்பில்  சில குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தீர்கள் ,

அதனை  வாசித்த போது  உங்கள்  தேர்ந்த  அரசியல்  அறிவு குறித்து  எனக்கே  சந்தேகம் எழுந்ததுடன் மிகவும் சிறுபிள்ளைத் தனமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தீர்கள்,

முதலாவதாக  கூறியிருந்தீர்கள்  கிழக்கு மாகாண முதலமைச்சர்  நீண்ட கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர் அல்லவெனவும் அவரின்  அனைத்து  செயற்பாடுகளும் விமர்சிக்கப்பட வேண்டியவையே  எனக் கூறியிருந்தீர்கள்,

ஒருவர்  எத்தனை வருடம்  அரசியலில் இருக்கின்றார் என்பதைக்  கொண்டுதான் ஒரு  அரசியல்வாதியுடைய திறமை மதிப்பிடப்படுமானால்  முதலில்  உங்களைப்பற்றித்  தான்  நாங்கள் விமர்சிக்க வேண்டும்.

ஏனென்றால்  13 வருடத்துக்கும்  மேலாக அரசியலில்  இருக்கும் நீங்கள் கிழக்கிற்காகவோ உங்கள் ஊருக்காகவோ  பெயர் சொல்லும்  படி  செய்த  சேவை என்ன?

நீங்கள் கூறுவதைப் போன்று  குறுகிய கால அரசியல் பயணத்தை கொண்ட கிழக்கு முதலமைச்சர் தான் கேட்ட முதல் தேர்தலில்  2012 ஆம் ஆண்டு  மாகாண சபை அமைச்சராகி 2015 ஆம்  ஆண்டு இலங்கையின் சிறுபான்மையின பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் தனது  தலைமையில் ஆட்சியொன்றை நிறுவுகின்றார்,

13 வருட  அரசியலில் இருப்பதாகக் கூறும்  உங்களுக்கு குறுகிய காலத்தில் அரசியலில் இவ்வாறான சாதனையை  படைக்கக் கூடிய ஆற்றல் ஆளுமை திறமை இருந்ததா?அவ்வாறாயின் குறுகிய காலத்திலேயே முதலமைச்சராக ஒருவர் வருகின்றாரென்றால் அவருக்கு இருக்கும்  சாணக்கியம் ,ஆளுமை,இராஜதந்திரம் ,தேர்ந்த அரசியல் அறிவு இது எதுவும் உங்களிடம் இல்லையென்று தானே அர்த்தப்படுகின்றது..

நீங்கள்  2004ஆம் ஆண்டு  தான் ஶ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸிலிருந்து  முகவரி பெற்று அரசியல் பயணத்தை ஆரம்பித்தீர்கள் ஆனால் கிழக்கு முதலமைச்சரோ அந்தக் கட்சியின் ஸ்தாபகரான மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தவர் என்பதை வரலாறு அறிந்தவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்,

அதை விட  அவர்  மேல்மாகாண சபைக்கும் இதற்கு  முன்னர்  போட்டியிட்டு  தெரிவாகி உறுப்பினராக இருந்துள்ளதுடன் தனித்து  நின்று  அரசியல் செய்து  சாதித்துக் காட்டியவர் என்ற வரலாறும் அவருக்குண்டு,

அரசியல் என்பது ஒருவரின்  காலத்தைக் கொண்டு மதிப்பிடுவதல்ல அவரின் சேவைகளைக் கொண்டு மதிப்பிடுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,

கிழக்கு  முதலமைச்சரின் அனைத்து  செயற்பாடுகளும் விமர்சனத்துக்குரியதே என நீங்கள் எடுத்த எடுப்பிலேயே  கூறுவது  உங்கள் காழ்ப்புணர்வையே காட்டி நிற்கின்றது.

புதிதாக வகுப்பிற்கு வந்து  முதலாம் ஆளாக வந்த மாணவனைப்  பார்த்து தனது இடம் பறிபோய்விட்ட  சிறுவன் வௌியிடும் ஆதங்கத்தையே நீங்கள் வௌிக்காட்டியிருக்கின்றீர்கள்.
உங்கள்  கருத்துப்படியே  நீங்கள்  அறிக்கை விட்டு காலத்தை கடத்திய கல்வியியல் கல்லூரி ஆசிரியர் விவகாரத்தில், முதலமைச்சர் போராடி  தமது  மாகாண ஆசிரியர்கள்  எமது மாகாணத்துக்கே வேண்டும் என அவர்களை மீள பெற்றுக் கொண்டது விமர்சனத்துக்குரியது என கூறுகின்றீர்களா?
அவ்வாறாயின்   நமது பெண்பிள்ளைகள் 4 வருடங்கள் தூர இடங்களில் தமது பெற்றோரை  பிரிந்து  சென்று கற்று, மீண்டு்ம்  தமது பெற்றோரை  பிரிந்து  தூரப்  பிரதேசங்களில்  கஷ்டப்படுவது  சரியே என்பதா உங்கள் நிலைப்பாடு கௌரவ பிரதியமைச்சர் அவர்களே.

உங்கள்  சொந்தத்  தொகுதியில்  எத்தனையோ  வருடமாக  இருக்கும் குடிநீர்ப் பிரச்சினையை  உங்களால் தீர்க்க முடிந்ததா?இது குறித்து  எங்காவது  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தீர்களா ? இந்நிலையில்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சினூடாக நிதியைப்  பெற்று கிரான் முதல் கல்குடா வரை 475 மில்லியன் ரூபா செலவிலான குடிநீர்க்கட்டமைப்பொன்றை  நிறுவும்  திட்டத்தைப் பெற்றுத் தந்த  முதலமைச்சரின்  செயற்பாடு விமர்சனத்துக்குரியதா?

அல்லது இரண்டு   தசாப்தங்களுக்கு மேலாக மதிலின்றி  பாதுகாப்பின்றி இருந்த  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சுற்று மதில்  ,கேட் மற்றும் அதனை  அண்டிய உள்ளகப் பாதை ஆகியவற்றுக்கு 10 மில்லியன் ரூபா நிதியைப் பெற்று புனரமைத்துக் கொடுப்பது விமர்சனத்துக்குரியதா?

உங்கள் பகுதியில்  உள்ள வை அஹமட் வித்தியாலயம் உங்கள் கண்களுக்கெல்லாம் புலப்படாத போது  ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட ரீதியில் மூன்று மாடிக்கட்டடம் மேலும் பல அபிவிருத்திப் பணிகள் செய்யப்பட்டு மிடுக்குடன் காட்சியளிப்பது  விமர்சனத்துக்குரியதா?

கடந்த 13 வருடமாக  கல்குடா தொகுதியில் அமைச்சராக பிரதியமைச்சராக  இருந்த போதெல்லாம்  செய்ய முடியாதவற்றை  முதலமைச்சராக பதவியேற்று இரண்டு வருடங்களே ஆகியுள்ள ஹாபிஸ் நசீர் அஹமட்டால் 2016 ஆம் ஆண்டு  மாகாண நிதியொதுக்கீட்டினூடாக  21 கோடி ரூபா செலவில்  உங்கள் பகுதியிலேயே  அபிவிருத்திகளை செய்துள்ளமை விமர்சனத்துக்குரியதா?

நான்  கூறியெதல்லாம்  உங்கள் பகுதிக்கான அபிவிருத்திகள்  மாத்திரமே.  2015 ஆம் ஆண்டு முதலமைச்சராகி  2016 ஆண்டிற்குள் உங்கள் பகுதியில்  மாத்திரம்  இத்தனை கோடி ரூபா அபிவிருத்திப் பணிகள் என்றால் இத்தனை வருடமாக  நீங்கள் எவ்வளவு செய்திருக்க வேண்டும்,

அவர் ஏனைய பிரதேசங்களுக்கு செய்த அபிவிருத்திகளையும் சொல்லப் போனால்  ஏராளம் உண்டு.
ஆகவே  ஒருவரை  விமர்சிக்கின்றோமென்றால்  அதற்கான  தக்க காரணங்கள் இருக்க வேண்டுமெயன்றி  சுயலாபத்துக்காய் விமர்சனம்  செய்வது  காழ்ப்புணர்வேயன்றி  வேறில்லை.

கிழக்கு  முதலமைச்சர்  தமது  மக்களுக்கு அன்பளிப்புக்களைக் கொடுத்து  அரசியலுக்கு வந்தவர் என்று  நீங்கள் கூறியிருக்கீன்றீர்கள்.இதைக்  கேட்கும் போது  எனக்கு  மகிழ்ச்சியே வருகின்றது.
ஏனென்றால்  எத்தனையோ  அரசியல்வாதிகள் ஏமாற்றங்களையும்  பொய்வாக்குறுதிகளையுமே  மக்களுக்கு வழங்கும் போது  முதலமைச்சர் மக்களுக்கு அன்பளிப்பு வழங்கியுள்ளார் என்றால்  எவ்வளவு சிறந்த விடயம்.

கிழக்கு  முதலமைச்சராக பதவியேற்றதும்  நசீர் அஹமட் அவர்கள்  பெண்கள் பணிப்பெண்களாக செல்வதைத் தடுப்பதாகவும் ,வறுமையற்ற மாகாணமாக  கிழக்கு மாகாணத்ததை மாற்றுவதாக கூறினாரே  அது நடந்ததாக செல்வம் கொழித்ததா என ஒரு  கேள்வியைக் கேட்டிருந்தீர்கள்
எந்தவொரு  அரசாங்கமும் ஆட்சிக்கு வரும் போது  வேலைத்திட்டமொன்றை முன்வைக்கும் . அந்த வேலைத்திட்டம் ஒரு தூர நோக்கு கொண்டதாக அமைந்திருக்கும்,அதன்படி அவர்கள் படிமுறை படிமுறையாக  செயற்பட்டு அதனை செயற்படுத்துவார்கள்,
இது  தான் ஜனநாய ஏற்றுக்  கொள்ளப்பட்ட  அரசியல் பரப்பில்  உள்ள  முக்கியமான பொறிமுறையாகும்,

கிழக்கு மாகாண முதலமைச்சரவர்கள்  பதவியேற்கும்  போது தனது கொள்கையை கூறியிருந்தார்கள் தற்போதும் அதை கூறிவருகின்றார்,
வௌிநாட்டுக்குப் பணிப் பெண்களாக தமது  பெண்கள் செல்லாமல் தடுப்பதற்கு எதை மாற்றுத திட்டமாக கொண்டுவரலாமென எண்ணி ஆடைத்தொழிற்சாலைகளை  நிறுவும் திட்டத்தை  கொண்டு வந்தார்.

அதனடிப்படையில் தற்போது  ஏறாவூரில் ஒரு ஆடைத்தொழிற்சாலை  அமைக்கப்பட்டுள்ளதுடன்  சீதனவௌியில்  ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகின்றது  அத்துடன் சம்மாந்துறையிலும் ஒரு ஆடைத்தொழிற்சாலை  அமைக்கப்படவுள்ளது,’

இதனூடாக பணிப்பெண்கள் வௌிநாடுகளுக்கு செல்வது குறைக்கப்பட்டு உள்ளூரிலேயே தொழில்வாய்ப்புக்களை வழங்கும் தூரநோக்குத் திட்டமாகும்,
ஒரு கொள்கையுள்ள அரசியல்வாதியாக  இது கிழக்கு முதலமைச்சரை அடையாளங்காட்டுகின்றது என்பதுடன் உங்களைப்  போன்ற போலி வாக்குறுதி அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட வேட்டாகவே இதனைக் கருதுகின்றேன்.

கிழக்கு முதலமைச்சர் அரசியல்  பழிவாங்கல் செய்கின்றார் அரசியலுக்காக இடமாற்றம் செய்கின்றார் என்ற உங்களுடைய குற்றச்சாட்டைப் பார்க்கும் போது எனக்குள்  நானே சிரித்துக் கொள்கின்றேன்.
மனிதர்கள்  எவ்வாறு  சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தம்மீதான குற்றச்சாட்டுக்களையே மற்றவர்கள் மீது சுமத்துகின்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்,

அதிபர்களுடைய அலுவலகத்துக்குள் நுழைந்து  அவர்கள் கதிரையிலேயே கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர்கள் யார்?என் சொற்படி கேட்காவிட்டால் கஷ்டப் பிரதேசத்துக்கு மாற்றுவேன் என்று சொன்னவர்கள் யார் என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்,

அவதூறு கூற முன் இறைவனை  பயந்து கொள்ளுங்கள் கௌரவ பிரதியமைச்சர் அவர்களே,
கடந்த சில தினங்களுக்கு முன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் நிசாம் அவர்கள் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறிய கருத்தே உங்கள் குற்றச்சாட்டுக்கு பதிலாக அமையும் என்று எண்ணுகின்றேன்.

இந்த முதலமைச்சருடைய காலப்பகுதியில்  தான்  நாம் சுதந்திரமாக பணிபுரிகின்றோம்,இப்போது  தான் எனக்கு  என் கடமையை  செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்திருப்பதாக ஒரு உயர் அதிகாரி கூறியதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கூறினார்,
பட்டதாரிகள் விடயம்  தொடர்பில், பிரதமரையும் ஜனாதிபதியையும் தொடர்பு கொண்டதாக நீங்கள் கூறி பிறகு அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சரொருவரே அதைக் கண்டித்தார் என்பதை ஊடகங்களில் காண முடிந்தது.

ஆனால் கிழக்கு முதலமைச்சர்  பிரதமர் அவர்களுடன் பேசி  அவரின ஆலோசகருடன் கூட்டமொன்றையும் நடாத்தி தற்போது  தீர்வுக்கான நடவடிக்கைகள்  மும்முரமாக முன்னெடுக்கப்படுவதை அறிகின்றோம்,
மக்களை மடையர்களாக எண்ணி வசைபாடும்  அரசியல் கலாசாரத்தை இனிமேலும்  சிறுபான்மை சமூக அரசியலில் முன்னெடுக்காதீர்,

உங்களைப் போன்றை  அரசியல்வாதிகள் பொய்களைக் கூறி முன்னெடுக்கும் அரசியலால்தான் ஏனைய அரசியல்வாதிகளையும் மக்கள் ஒரே கண்ணில் பார்க்கின்றார்கள்.
ஆகவே உங்கள் மேல் எனக்கு  எந்த கோபமும் இல்லை உங்களை நம்பி வாக்களிக்கும் அந்த மக்கள் மீது தான் பரிதாபப்படுகின்றேன்.

இனியாவது  யதார்த்தவாத  அரசியல்வாதிகளை புரிந்து கொண்டு  போலிகளை ஒதுக்கி  ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்துக்கு வித்திடும் சமூகமாக எமது சமூகம் மாற வேண்டும் என்ற நோக்கிலேயே இதனை எழுதினேன்.

இதனால்  யார் மனமும் புண்பட்டிருந்தால் என்னை மன்னியுங்கள் உண்மைகள் மறைக்கப்படுவதும் மறுக்கப்படுவதும் மாபெரும் அநீதியாகும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்,

இப்படிக்கு
மொஹமட் ஹாரிஸ்
கல்குடாத் தொகுதி
Previous Post Next Post