எம்.ஜே.எம்.சஜீத்
பொத்துவில் அல்-குபா வித்தியாலயத்தினை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கோரிக்கை
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொத்துவில் அல்-குபா வித்தியாலயத்தினை மீள ஆரம்பிப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணியை அண்மையில் சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை மேற்குறித்த விடயம் தொடர்பில் கோரிக்கை விடுத்தார்.
பொத்துவில் பிரதேச மாணவர்களின் நன்மை கருதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 39மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அல்-குபா வித்தியாலயம் பின்னர் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் 2013.05.02ஆம்' திகதி இப்பாடசாலையை உடனடியாக இடைநிறுத்தம் செய்வதாகவும், முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் மீண்டும் இப்பாடசாலையை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை காலமும் அல்-குபா வித்தியாலயத்திற்கான அனுமதி கிடைக்கப்பெறாமையினால் பொத்துவில் பிரதேச ஏழை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இம்மாணவர்களின் எதிர்காலம் கருதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் இப்பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்று அனுமதியினை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.