தம்புள்ளை பள்ளிவாசலை இடமாற்றிக்கொள்வதற்கு தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. அதனால் எந்தவொரு அமைப்பும் பள்ளிவாசலை இடம் மாற்றக்கூடாது என கையொப்பங்களை சேகரிப்பதைத் தவிர்க்க வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாக சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களுடன் நல்லறவைப்பேணி வாழ்பவர்கள். அவர்கள் அபிவிருத்திக்குத் தடையானவர்களல்ல. சமூகத்தினதும், நாட்டினதும் நலன்கருதி, அபிவிருத்திக்கு பங்காளராகும் நோக்குடனே பள்ளிவாசலை இடமாற்றிக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
பள்ளிவாசலை இடமாற்றக்கூடாது என கையொப்பங்கள் சேகரிப்பவர்கள் அந்த நடவடிக்கையை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கை அரசியல் இலாபம் கருதியே மேற்கொள்ளப்பட்டுள்ளது என பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் தெரிவித்தார்.
ஐக்கிய சமாதான முன்னணி தம்புள்ளை பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்து இடமாற்றப்படக்கூடாது என இரண்டு இலட்சம் கையொப்பங்கள் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.