Top News

முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் நீதி



பைறுஸ்

அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை நடந்து சரியாக 1000 நாட்கள் கடந்துவிட்டதை நினைவூட்டியுள்ள ஆர்.ஆர்.ரி அமைப்பு, இது தொடர்பில் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக குறித்த வன்முறையின் போது ஆயுதம் தாங்கிய இனவாதிகளால் இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழருமாக மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

எனினும் இவர்களது படுகொலை தொடர்பில் இதுவரை நீதிமன்றத்தினால் கூட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

குறித்த வழக்கு அவ்வப்போது விசாரணைக்கு வருகின்ற போதிலும் குற்றவாளிகளை கண்டறியும் வகையில் நீதிமன்றினால் உத்தரவுகள் இடப்பட்ட போதிலும் அவற்றையும் பொலிசார் அலட்சியம் செய்தே வருகின்றனர்.

அதேபோன்றுதான் இந்த வன்முறையை முன்னின்று தூண்டிய பொது பல சேனா அமைப்புக்கும் அதன் முக்கியஸ்தர்களுக்கும் எதிராக எந்தவித நடவடிக்கைகளும் கடந்த அரசாங்கத்தினாலோ தற்போதைய அரசாங்கத்தினாலோ முன்னெடுக்கப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முஸ்லிம்கள் பெருவாரியாக ஆதரவளித்தமைக்கு காரணம் அளுத்கம வன்முறைச் சம்பவமேயாகும். அளுத்கம வன்முறைகளின் மறைகரமாக அப்போதைய ஆட்சியாளர்களே இருந்தனர் என்பது வெளிப்படையாகத் தெரிந்த நிலையிலேயே முஸ்லிம்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினர்.அதேநேரம் புதிய ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுவார்கள் என்றும் முஸ்லிம்கள் எதிர்பார்த்தனர்.

 எனினும் துரதிஷ்டவசமாக தற்போதைய ஆட்சியாளர்கள் அவ்வாறானதொரு சம்பவம் நடந்ததே தமக்கு தெரியாது என்ற போர்வையிலேயே செயற்படுகின்றனர்.

தேர்தல் காலத்தில் அளுத்கம வன்முறையின் பின்னணியிலிருந்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனக் கூறி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் இன்று அதுபற்றிப் பேசுவதற்கே கூச்சப்படுகின்றனர்.

ஆக மொத்தத்தில் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நியாயத்தைப் பெற்றுத்தர விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

இருந்த போதிலும் இதனை அவ்வாறு இலகுவில் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

அந்தவகையில்தான், இது விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீதுள்ள கடப்பாட்டை இந்த இடத்தில் மீளவும் ஞாபகமூட்ட விரும்புகிறோம். ஏனெனில் அளுத்கம வன்முறையினால் அப்பகுதி மக்கள் பாரிய இழப்புகளைச் சந்தித்த போதிலும் அதன் மூலம் அதிகம் நன்மையடைந்தவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளேயாவர்.

பலர் இன்று அமைச்சர்களாகவும் எம்.பி.க்களாகவும் வலம் வருவதற்கு அளுத்கம உள்ளிட்ட முஸலிம்களுக்கு எதிரான நிகழ்வுகளே காரணமாக அமைந்தன என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.

கடந்த வருடம் ஒக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்த சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயா கூட, கடந்த மாதம் வெளியிட்ட தனது அறிக்கையில் அளுத்கம விடயத்தில் நீதி நலைநாட்டப்பட வேண்டும் என பிரத்தியேகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவேதான் 1000 நாட்களாக மறுக்கப்படும் நீதியை தமது சமூகத்திற்குப் பெற்றுத் தர முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.

அது அவர்கள் மீதுள்ள சமூகக் கடமை மாத்திரமன்றி அமானிதமுமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.
Previous Post Next Post