'மதுபான உற்பத்திச்சாலை ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைப்பதற்கான அனுமதியினை இந்த அரசாங்கம்வழங்கியிருப்பதானது நல்லாட்சியை எதிர்பார்த்த மக்கள் அனைவரையும் மற்றுமொருமுறை ஏமாற்றம் அடையச்செய்திருக்கின்றது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அரசாங்கத்திடம்கோரியுள்ளது.
மட்டக்களப்பு-கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் மதுபான தொழிற்சாலை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர்ஆகியோர்களுக்கு NFGGயின் தவிசாளர் பொறியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.இக்கடிதத்திலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
"இந்நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தையும் ஆட்சி முறை ஒன்றினையும் உருவாக்குவதற்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தஅரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றுவதாகவும்; ஏமாற்றம் அடையச் செய்வதாகவுமேஅமைந்துள்ளன. கல்குடா பிரதேசத்தில் மதுபான தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளஅனுமதியும் விஷேட வரிச்சலுகைகளும் மக்களை இன்னுமொருமுறை ஏமாற்றம் அடையச் செய்திருக்கின்றது.
இந்நாட்டில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தி புதியதொரு சமுக கட்டமைப்பை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியுடனேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்த உறுதி மொழியினை அமுல் படுத்துவதற்கானஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதனை காணமுடியவில்லை. இதற்குப் பதிலாக மதுபானஉற்பத்தியினை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் தொழிற்சாலைகளை நிறுவி, தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, மக்களின் வாழ்க்கைத்தரத்தைமேம்படுத்துவோம் என இந்த அரசாங்கம் கிழக்கு மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தது. ஆனால், இப்போது மதுபானதொழிற்சாலை அமைப்பதற்கு மாத்திரமே அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஏற்கெனவே மட்டக்களப்பு மாவட்டம் அதிக மதுபாவனை உள்ள மாவட்டங்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஏழை மக்களின்உழைப்பில் வருடாந்தம் பல நூறு மில்லிய்ன் ரூபாய்கள் மதுபானத்தில் வீண்விரயம் செய்யப்படுகின்றது. இதனால் குடும்ப , சமுகசீரழிவுகள் அதிகரித,து வருகின்றன. இப்படியான ஒரு நிலைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் இந்த மதுபான தொழிற்சாலையைஅமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்களின் நலனில் எவ்வித அக்கறையுமற்ற பொறுப்புமற்ற அரசாங்கத்தின்நிலைப்பாட்டினையே சுட்டிக் காட்டுகின்றது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தக் கூடிய தொழிற்சாலைகளையும் தொழில்வாய்ப்புக்களையுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது போன்ற மக்களின் வாழ்க்கையை குட்டிச்சுவராக்குகின்றதொழிற்சாலைகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
மேலும், மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக மதுபானப் பொருட்கள் மீது அதிகமான வரியினைவிதிப்பதென்பது பொதுவான ஒரு நடைமுறையாகும். ஆனால் குறித்த இந்த தொழிற்சாலைக்கு 450 கோடி ரூபா வரையிலானவரிச்சலுகையினை இந்த அரசாங்கம் வழங்கியிருக்கின்றதென்பது ஆச்சரியமளிக்கின்றது. உண்மையில் மது பாவனையைகட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதனை ஊக்குவிக்கின்ற போக்கினையே இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கின்றதா? என்ற கேள்விஇங்கு பலமாக எழுகின்றது.
மேலும், குறித்த இந்த தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கு கோரளைப் பற்று பிரதேச சபையினால் அனுமதிமறுக்கப்படடுள்ள நிலையிலும் குறித்த இந்த நிறுவனம் அதனை உதாசீனம் செய்து நிர்மாணப்பணிகளை தொடர்ந்தும்மேற்கொள்கின்றது. அத்தோடு, இதனைப் பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர்களையும் தாக்குகின்ற அளவிற்கு மிகவும்மிலேச்சத்தனமாக அவர்கள் நடந்து கொணடிருக்கின்றனர். இந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரம் கொண்டோர் சிலர் இதற்குஉறுதுணையாக நின்று செயற்படுவதனையே இது போன்ற நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.
எனவே, மக்களின் வாழ்க்கையினையும் சமுக பொருளாதார கட்டமைப்பினையும் சீரழிக்கின்ற இந்த வேலைத்திட்டத்திற்கு அனுமதிவழங்கியமைக்கு எமது வன்மையான கண்டனத்தை மக்கள் சார்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய நாம்தெரிவிக்கின்றோம்.
அத்தோடு இந்த நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைமீறுகின்ற நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்."