தஹஜ்ஜத் தொழுதுவிட்டு ஒருகோப்பை பிளேன்ரியையும் குடித்த கையுடன் ஒருகையில் மண்வெட்டி, தோளில் எண்ணெய்க் கலன், தேய்ந்த செருப்பு, கிழிந்து தையலுசால் தைக்கப்பட்ட சேர்டு, மங்கிப்போன சாறன் என்ற முகத்தில் சோகத்துடன் தினமும் வயலுக்கு கூலி வேலைக்கு புறப்படும் ஒரு தந்தை,
குப்பிவிளக்கில் நுளம்புக்கடியில் பிற்பட்ட இரவில் துாங்கி, சக்கரையுடக் சுடுதண்ணி பிளென்ரி குடித்து தஹஜ்ஜது தொழுதவுடன் கொள்ளியடுப்பில் இடியப்பம் சுட்டு விற்கும் தாய்,
இருகண்களும் தெரியாத சகோதரி, திருமண வயதை எட்டியிருந்தும் திருமணமாகாத இன்னுமொரு சகோதரி,
இப்படி அடுக்கடுக்காய பல்லாயிரம் கஷ்டங்களுடன் சாதாரண தரத்தில் 9 ஏ சித்தி பெறுகிறாள் பாத்திமா,
பாத்திமாவுக்கு இருந்தது ஒரே ஒரு நோக்கு உயர்தரம் சித்திபெற்று பல்கலைகழகம் சென்று படித்து தொழிலெடுத்து என் வீட்டிற்கு மின்சாரம் எடுக்க வேண்டும் என்று!
இந்த ஒளியை நோக்கிய பாதை கறடு முறடாகவும், முட்கள் நிரம்பியதாகவும் இருந்தாலும் கற்க ஆரம்பிக்கிறாள் பாத்திமா.
உயர்தரத்தில் விஞ்ஞானம் அல்லது கணிப்பிரிவு எடுத்தால் நிறைய செலவு வரும் என்பதற்காய் கலைப்பிரிவை தொடங்கி மாலைநேர வகுப்புக்களுக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து கற்கிறாள்.
பிளேன்ரியும் உம்மாவின் இடியப்பமுமே அவளின் பிரதான உணவு, கோழி - மாட்டிறைச்சி என்பவற்றை அவள் நினைத்தும் பார்த்ததில்லை. சீத்தை துணி சல்வார், 150 ரூபாய் செருப்பு இதுவே அவளின் அழகுப்பொருட்கள். பல்பொடி, சன்லைட் சோப் இரண்டுமே மேக்அப். அப்டியிருந்தும் பல்கலை செல்லும் கனவை அவள் விட்டுவிடவில்லை.
உயர்தர பெறுபேறுகள் வெளியாகிறது, பாத்திமா சித்தி பெற்றாள், துாரத்தில் இருக்கும் பல்லை வேண்டாம் செலவாகும் என்ற காரணத்திற்காய் பக்கத்திலிருக்கும் தென்கிழக்கு பல்கலை கழகத்தை தெரிவு செய்கிறாள். ஒரே ஒரு ஹபாயா - துவைத்து துவைத்து தினமும் அதனையே போட்டு செல்கிறாள்
எல்லாம் தன்வீடு ஒளிபெற வேண்டும் என்னை சுற்றியுள்ளவர்கள் ஒளிபெறவேண்டும் என்பதற்கான ஒரு சாத்வீக போராட்டம். தனக்கான அனைத்தையும் இழந்து ஒரு அரச தொழிலுக்காக கஸ்டங்களுக்கு மேல் கஸ்டங்களை தாங்குகிறாள் பாத்திமா.
பட்டப்படிப்பு முடிந்தது, பட்டமளிப்பு விழா செல்ல வசதியற்ற காரணத்தினால் தன் பட்டத்தை அலுவலகத்திலே சென்று பெற்றுக்கொள்கிறாள் பாத்திமா.
வாப்பா சம்பாதித்த அரைவாசிப்பணத்தில் வேலைக்கான விண்ணப்படிவத்தை வாங்கி வாங்கி அவள் காலம் சென்றது. ஐந்து ஆண்டுகள் சென்றது இன்னமும் சென்று கொண்டுதான் இருக்கிறது. வேலை கிடைக்கவில்லை திருமணம் ஆகவில்லை, வீடு ஒளிபெறவி்ல்லை கூடவே இருக்கும் சகோதரிகளின் வாழ்வு ஒளிபெறவில்லை..
போராட்டங்களுக்கான அழைப்பு கிடைக்கப்பெறுகிறது,
அவளும் அங்கு சோற்றுப்பார்சலை கட்டிக்கொண்டு காரைதீவுக்கு செல்கிறாள். கலந்து கொள்கிறாள், வெயிலும் சோகமும் அவளின் முகத்தை செழிப்பில்லாமல் ஆக்கியது.
இன்று வீட்டில் சாப்பாடே இல்லாத காரணத்தினால் பட்டினியாய் சென்ற பாத்திமாவுக்கு போராட்ட களத்தில் சமைத்து கொடுக்கப்படுகிறது.
இன்றுதான் அவள் நல்ல கறியுடன் சாப்பிடுகின்றாள் ஆனால் இன்னும் அவள் வீடு ஒளிபெறவில்லை.
பல்கலையின் கதவுகளை பாத்திமா மூடிவிட சொல்கிறாள் காரணம் அவளை போன்ற ஏழைகளின் வாழ்விற்கு அதுசாபக்கேடு என்று அங்கலாய்க்கிறாள்..