வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அப்பிரதேச
மக்களுக்குப் பாதிப்பில்லாத தீர்வினை முன்வைப்பதற்கு மகாவலி
அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
தலைமையிலான குழு எதிர்வரும் 27ஆம் திகதி மன்னார் மறிச்சுக்கட்டிக்கு
விஜயம்செய்து கள ஆய்வினை மேற்கொள்வதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்
அவ்வாய்வினூடாக ஜனாதிபதி கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அதில் பிரதேச மக்களுக்கு
சொந்தமான காணி இருப்பது உறுதிசெய்யப்படுமிடத்து
வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்து
திருத்தியமைக்கப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர்
பி.பி. அபேகோன் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள
வர்த்தமானி அறிவித்தலினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு
காணும் நோக்கில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அமைச்சர் ரவூப்
ஹக்கீம் தலைமையிலான மு.கா. பிரதிநிதிகள் மற்றும் முசலி சிவில் சமூக
பிரதிநிதிகள் அடங்கிய குழுவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன்போதே குறித்த
உடன்பாடு காணப்பட்டது.
மாலை 3.30 தொடக்கம்
4.45 மணிவரை தொடர்ந்த அப்பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரவூப்
ஹக்கீம், பிரதியமைச்சர் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் சல்மான்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் முசலி சிவில்
சமூக அமைப்பின் உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், மொயினுதீன்,
நியாஸ் உள்ளிட்டடோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன்
மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,
சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் உள்ளிட்ட
அதிகாரிகளும் அச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment