நாட்டில் ஏற்பட்டுள்ள உஷ்ணமான கால நிலை மாற்றம் காரணமாகவும் வைரஸ் தொற்று நோய்கள் காரணமாகவும் மக்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலையானது மே மாத இறுதி வரை நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன் அதிக உஷ்ணமான வானிலை காரணமாக வைரஸ் தொற்றுப் பரவுவதால் கண் நோய் ஏற்படக் கூடிய சாத்தியமுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் இன்புளுவென்சா வைரஸ் பரவுவதால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடுமல் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏற்கனவே டெங்கு மற்றும் எச்.1 என்1 வைரஸ் தொற்றுக்கள் காரணமாக ஏராளமானோர் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக 2017 இன் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 30 ஆயிரத்து 486 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 11547 டெங்கு நோயாளர்கள் நாடெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது விடுமுறை காலம் என்பதால் பலரும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள தயாராகின்றனர். இந்நிலையில் நாட்டின் கால நிலை மற்றும் வைரஸ் தொற்றுக்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சிறுவர்களை கொளுத்தும் வெயிலில் விளையாட அனுமதிப்பதையும் வெளியில் நீண்ட நேரம் சுற்றித் திரிவதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன் வைரஸ் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் சிகிச்சைகளை மேற்கொள்வதுடன் ஏனையோருக்கும் தொற்றாது பார்த்துக் கொள்வது அவசியமாகும்.
இதற்கப்பால் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறான விபத்துக்களில் சிக்கிக் கொள்ளாது கவனமாக நடந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
Post a Comment