2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து அரச தரப்பின் சில சக்திகள் திட்டமிட்டவகையில் இலங்கை முஸ்லிம்கள் மீதான தொடர்தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. இவர்கள் தென் பகுதி முஸ்லிம்களின்பொருளாதார,சமய மற்றும் அரசியல் உரிமைகளையும், வடகிழக்கு வாழ் முஸ்லிம்களில் வாழிடங்களையும், மீள் குடியேற்ற உரிமைகளையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.
LTTE தீவிரவாதத்துக்கு துணைபோகவில்லை என்ற பின்னணியில் 48 மணிநேர அவகாசத்தில் தமது தாய்மண்ணிலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம்களை “தேசப் பற்றாளர்” விருதுவழங்கி அனைத்து வசதிகளுடனும் கௌரவமான முறையில் குடியேற்றக் கடமைப்பட்டுள்ள அரசு இன்று இனவாதச் சக்திகளில் சதிவலையில் சிக்கி அந்த மக்களை திறந்த வெளிச் சிறைக்கைதிகளாக மாற்றியுள்ளதை 24.03.2017 அன்று வெளிவந்த வர்த்மானி அறிவித்தல் உறுதிசெய்கின்றது.
பல நூறு வருடங்களாக விவசாயம், மந்தைமேய்ப்பு மற்றும் குடியிருப்பு எனும் வேறுபட்ட மானிட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட முசலி பிரதேச காணிகள் 2012 ஆம் ஆண்டு அரச வர்த்தமானியுடன் ஒதுக்கீட்டு வனமாகவும், இன்று பாதுகாக்கப்பட்ட வனமாகவும் பிரகடனப்பட்டுள்ளது. முறையான ஆய்வுகளோ, மக்கள் கருத்தறிதல்களோ இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த எல்லை நிர்னயம் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 82% நிலங்களை அபகரித்துள்ளதுடன், பிரதேச மக்களை சூழலியல் அகதிகளாக வாழ நிர்ப்பந்தித்துள்ளது.
இன்று முசலி மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த நிலைமை நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு வெளிப்பாடு என்பது புலப்படுகின்றது. இந்தப்பின்னணியில், 05.04.2017 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், துறை சார்நிபுணர்கள், சட்டத்தரணிகள்,மற்றும் தேசிய முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பல முக்கிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கடந்த 05ஆம் திகதி கொழும்பில் ஒன்றுகூடய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை மன்றத்தின் 3ஆம் அமர்வில் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் கலந்தரையாடப்பட்டன.
· முசலி நில ஆக்கிரமிப்பானது பிழையான எடுகோல்களின் அடிப்படையில் ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு அடிப்படை உரிமை மீறலாகும். எனவே இதற்கான நியாயமானதும், நிலையானதுமான தீர்வை அடைவதில் அனைத்து இன, மத, அரசியல் தலைமைகளையும் ஒன்றிணைத்த பல மட்டங்களிலுமான பரந்துபட்ட முன்னெடுப்புக்களை எடுத்தல்.
· முசலி மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றி நாடளாவிய மட்டத்தில் பல மட்டங்களிலும் பொது மக்களையும், உரிய தரப்பினரையும் அறிவூட்டுவதுடன்,அவர்களது பூர்வீக நில உரிமைகளை உறுதிசெய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தல்.
· 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தேசிய அரசின் அனைத்து அரசியல் தலைமைகளையும் வலியுறுத்துவதுடன், நியாமான மாற்று வழிகளையும் பரிந்துரைத்தல்.
· யுத்தம் காரணமாக இடம்பெயந்த மக்களின் உரிமைகளை உறுதிசெய்வதில் தேசிய ஷுரா சபையானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி முஸ்லிம் தலைமைகளையும், சிவில் சமூக அமைப்புக்களையும் ஒன்றிணைத்து வழிநடாத்தல்.
தேசிய ஷுரா சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உப குழு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான இந்த தொடர்ச்சியான அமர்வுகளை ஏற்பாடுசெய்துவருகின்றது. இந்த அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அலி ஸாஹிர் மௌலானா,எம்.எச்.எம். சல்மான் அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி,எம்.எச்.எம். நவவி, இஷாக் அஹமட் அவர்களும்,ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக முஜீபுர் ரஹ்மான் அவர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களும் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய பேராசியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களும், அதனை சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் விளக்கினர். அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக தேசிய முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், துரைசார்ந்த நிபுணர்களும் கருத்துரைத்தனர்.
Post a Comment