ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்குப்
பங்காளர்களாக இருந்த முஸ்லிம்களை அவரிடமிருந்து பிரிப்பதற்கு
சிலர் முயற்சி செய்கிறார்கள்.
ஜனாதிபதி
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளுடன் சேர்ந்து செயற்படுகிறார்
என்று சிலரால் தவறான கருத்துப் பரப்பப்பட்டு வருகின்றது. எனவே முஸ்லிம்
சமூகம் விழிப்பாக இருக்க வேண்டுமென தேசிய ஒருமைப்பாடு மற்றும்
நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் புனரமைப்புத் தொடர்பில்
கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இவ்வாறு
கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; ‘நீண்ட காலமாக
செயற்படாதிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவை
புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி
தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதிக்கு ஆதரவாக
வாக்களித்த முஸ்லிம் மக்கள் தவறான பாதையில் வழி நடத்தப்படுவதை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு ஒருபோதும்
அனுமதிக்காது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பிரிவை துரிதமாக
செயற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும்
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது
முஸ்லிம்களின் கடமையாகும். ஜனாதிபதியின் தலைமையிலான நல்லாட்சி
அரசாங்கத்திலே முஸ்லிம்கள் பீதியின்றி சுதந்திரமாக வாழும் சூழல்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின்
தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்
கொள்வதற்கும் திட்டமிட்டு செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் முஸ்லிம் பிரிவு மேலும் பலம் பொருந்தியதாக மாற
வேண்டியுள்ளது.
எனவே, முஸ்லிம்கள் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த ஒன்றிணையுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
முஸ்லிம்
பிரிவின் கிளைகள் மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அக்கிளைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடன்
இணைந்து செயற்படும்.
எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் இயக்கத்தோடு முஸ்லிம் பிரிவு செயற்படும் என்றார்.