அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உருவாக்கப்பட்ட காலம் முதல் சமூகப் பிரச்சினைகளைஎதிர்கொள்ளும் போது ஷரீஆவின் வரையறைக்குள் நின்று நளினத்தன்மையையும் நடுநிலைமையான போக்கையும் கடைபிடித்து மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டு வந்துள்ளது.
கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் இதற்கு அடிப்படையாக காணப்படுகின்றது:
அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் : 2ஃ18)
மேலும் பின்வரும் ஹதீஸும் இதற்கு அடிப்படையாக அமைகின்றது:
'இலகுவாக்குங்கள்;, சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்;. வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி)
இன்னுமோர் இடத்தில் 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால் அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்;. நற்செய்தியையே சொல்லுங்கள்;.
காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்'என்று இறைத் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி)
இஸ்லாத்தின் போதனைகள் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துபவையல்ல என மக்களுக்கு எடுத்துக் காட்டுவது மார்க்க அறிஞர்களது கடமையாகும். ஏனெனில் உலமாக்களைப் பற்றி இஸ்லாம் கூறும் பொழுது அவர்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று குறிப்பிட்டுள்ளது. எனினும்அல்குர்ஆன் உலமாக்களுக்கு பின்வரும் வரையறையையும் விதித்துள்ளது.
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ளவற்றை, ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 5ஃ87)
மேற்கூறப்பட்ட வசனத்தின் அடிப்படையில் ஹலாலாக்கப்பட்ட ஒன்றை ஹராமாக்கவோ, ஹராமாக்கப்பட்ட ஒன்றை ஹலாலாக்கவோ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு முடியாது. துரதிஷ்டவசமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்கள் 'முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தற்போதைய நிலையில் பூர்த்தியானதாகவே உள்ளது' என்று கூறிய விடயம் தவறான முறையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
எமது முன்னோர்கள் இந்த சட்டத்தை இயற்றும் போது பல சிரமங்களை மேற்கொண்டு ஓரளவு பூர்த்தியான நிலைக்கு அதனைக் கொண்டு வந்துள்ளனர்.அது அக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும் என்பதே உண்மையில் அவர் கூற முற்பட்ட விடயமாகும். இது இன்றைய நிலையில் இச்சட்டத்திற்கு மாற்றங்கள் அவசியமில்லை என்பதை குறிக்காது. குறிப்பாக இது காழி நீதிமன்ற நிர்வாக முறையில் மாற்றங்கள் தேவையில்லை என்பதை குறிக்காது.
பெண்களுடைய விவகாரத்தில் காணப்படும் குறைபாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்கத்தயாராக இல்லை எனும் குற்றச்சாட்டு ஜம்இய்யாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும். பெண்களை மதிக்காதிருத்தல் அவர்களை கௌரவப்படுத்தல் அவர்களை ஒதுக்குதல் போன்றவை இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான செயற்பாடுகளாகும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கூறுகின்றது. ஆகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாஇந்த மார்க்கப் போதனைகளுக்கு எப்போதும் கட்டுப்பட்டே செயற்பட்டு வருகின்றது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
கீழே தரப்பட்டுள்ளவற்றின் மூலம் அல்லாஹு தஆலாவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், கலீபாக்களும் பெண்களுடைய விடயத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை அவதானிக்கலாம். திருக்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான். மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (அல்-குர்ஆன் : 58ஃ01)
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது மனைவியான உம்மு ஸலமா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்ததாக ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது. கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரில் இருக்கும் பொழுது ஒரு பெண் அவர்களிடம் வந்து கேள்வி கேட்க அவற்றை முழுமையாக செவிமடுத்துவிட்டு அப்பெண்ணுக்குத் தெளிவுரை வழங்கினார்கள்.
குர்ஆனும் நபிகளாரின் போதனைகளும் இவ்வாறு வழிகாட்டும் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இவ்வழிகாட்டல்களுக்கு மாற்றமாக எவ்வகையிலும் செயற்படமாட்டாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எப்பொழுதும் பெண்கள் விவகாரத்தில் கரிசனையுடனேயே செயற்பட்டுவருகின்றது. அவர்களது பிரச்சினைகளை செவிமடுத்து, அவர்களுக்கு உதவுவதற்கு ஜம்இய்யா எப்பொழுதும் தயாராகவே உள்ளது. பெண்கள் அமைப்புகள் மாத்திரமன்றி வேறு எவராயினும் எம்முடன் கலந்துரையாடல்களை நடாத்த விரும்பினாலும் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
இன்று எம்மத்தியில் காணப்படும் தப்பபிப்பிராயமும் பிழையான புரிதல்களும்தொடர்பாடல் இடைவெளியும் அவசியம் நீக்கப்படல் வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் நம்புகின்றோம். இன்று முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பரவலாக பேசப்படும் ஒரு தலைப்பாக காணப்படுகின்றது.உண்மையில் இன்றைய நிலையில் இச்சட்டத்தில்சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம்புகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு பொறுப்புவாய்ந்த நிறுவனம் என்ற வகையில் இவ்விடயத்தை பின்வரும்பல்வேறு கோணங்களில் அணுகவேண்டியுள்ளது:
1. மார்க்கப் போதனைகளுக்கு முரணில்லாது அமைத்தல்
2. பெண்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்
3. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின்அங்கீகாரத்தையும் ஏற்புடமையையும் உறுதிப்படுத்தல்
4. ஒவ்வொரு நபருக்கும் தரப்பினருக்கும்உரிய நீதத்தை உறுதிப்படுத்தல்
எனவே இவ்விடயங்களை அணுகுவதில் மார்க்க அறிஞர்கள் நடுநிலையைப் பேணி தம்மை முழுமையாக அர்ப்பணிக்கத் தயாராக உள்ளனர். அதேவேளை ஷரீஆ விடயங்கள் தொடர்பாக குழுவின் ஏனைய அங்கத்தவர்களுக்குஉணர்த்துவதுகுழுவில் அங்கம்வகிக்கின்ற உலமாக்களின் மார்க்கக் கடமையாகவும் காணப்படுகின்றது.
ஆரம்பத்திலிருந்தே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் சம்பந்தமான விடயங்களை மிகவும் கவனமாகக் கையாண்டு வருவதுடன் குழுவின் செயற்பாடுகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளது. இந்த நீண்ட பிரயாணத்தில் இக்குழு ஒரே அணியாக ஒற்றுமையுடன் முன்னேறி வந்துள்ளது. எனவே இந்தக் குழுவின் முடிவுகள்இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் திருப்திகரமாக நல்ல முறையில் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
குமுவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தம் தொடர்பான எமது முழுமையான அறிக்கை முக்கிய தலைப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களை உள்ளடக்கியதாகும். இதை பூரணமாக வாசித்தால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைபாடுகளையும் அவற்றிற்கு பின்னால் உள்ள காரணங்களையும் நியாயங்களையும் ஷரீஆ வரையறைகளையும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
பெண்களின் உரிமைகளும் ஒவ்வொரு தனிநபரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் இப்பணியை நிறைவேற்றஅனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி
Post a Comment