Top News

தொடுதிரை ஸ்மார்ட்போனில் விளையாடும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்


ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களில் விளையாடும் கைக்குழந்தைகள், டிஜிட்டல் சாதனங்களில் விளையாடாத குழந்தைகளைவிட குறைவான தூக்கத்தைதான் பெறுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் ஒரு நாளில் ஒரு மணிநேரம் தொடுதிரை கொண்ட டிஜிட்டல் சாதனங்களில் விளையாடினால் அவர்கள் சாதாரணமாக தூங்குவதைவிட 15 நிமிடங்கள் குறைவாக தூங்குவார்கள் என்று சயின்டிபிக் ரிபோர்ட்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வு பரிந்துரை செய்கிறது.

ஆனால், தொடுதிரையை பயன்படுத்தி விளையாடும்போது குழந்தைகள் மிக வேகமாக நடப்பது,ஓடுவது மற்றும் கை, கால்களை கொண்டு செய்யும் செயல்களை எளிதாக வளர்த்துக்கொள்வார்கள் என்று கூறுகிறது.

இந்த ஆய்வு தற்போதைய சமயத்திற்கு தேவையான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், இதையே நம்பியிருக்ககூடாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடுதிரை பயன்பாடு என்பது எல்லாவீடுகளிலும் பெருமளவு அதிகரித்துள்ளது. அதே சமயம், அதை பயன்படுத்தும் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான புரிதலில் பற்றாக்குறை உள்ளது.

மூன்று வயதுக்கு குறைவான வயதுள்ள குழந்தைகளை கொண்ட 715 பெற்றோர்களிடம் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிர்க்பெக் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்தது. குழந்தை எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனத்தில் விளையாடுகிறது மற்றும் குழந்தையின் தூங்கும் பாங்கு போன்ற விவரங்கள் கேட்கப்பட்டன.

75 சதம் குழந்தைகள் தொடுதிரையை தினமும் பயன்படுத்துகின்றனர் என்றும், அதில் 51 சதம்குழந்தைகள் ஆறு மாதம் முதல் 11 மாத குழந்தைகள் என்றும் 92 சதவீத குழந்தைகள் 25 முதல் 36 மாதங்கள் ஆன குழந்தைகள் என்றும் தெரியவந்துள்ளது.

தொடுதிரையை பயன்படுத்தி விளையாடும் குழந்தைகள் இரவு நேரத்தில் குறைவாகவும் பகல் நேரத்தில் அதிகமாகவும் தூங்குவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஒரு மணிநேர தொடுதிரை ஸ்மார்டஃபோன் பயன்பாட்டிற்கும் 15 நிமிடங்கள் குறைவாக அவர்கள் தூங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு நாளில், குழந்தை 10 முதல் 12 மணிநேரம் தூங்குவதால், 15 நிமிடங்கள் என்பது பெரிய அளவு இல்லைதான். ஆனாலும் குழந்தை வளரும்போது அதன் வளர்ச்சிக்கு தூக்கம் அவசியம். ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், என சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு ஆராய்ச்சியாளர்களின் ஒருவரான மருத்துவர் டிம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post