Top News

மு.கா தலைவருக்கு ஒரு பகீர் மடல்


கௌரவத்திற்கும் மரியாதைக்கும் உரித்தான அமைச்சர் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீம் அவர்களே! நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு பகிரங்க மடல் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கான காலமும் நேரமும் அப்பொழுது கை கூடவில்லை. இப்பொழுது அதற்கான வாய்ப்பினை வழங்கிய இறைவனுக்கு நனறி செலுத்துகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

மாமனிதர் அஷ்ரபின் மரணித்திற்குப் பின் முஸ்லிம்களின் அடையாளத்தினை பிரதிபலிக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவ் அவமானிதமானது முழு முஸ்லிம்களின் இருப்பு மீதான பெரும் வேலி என்பதினை நீங்கள் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. குருவியானது தன்னுடைய கூட்டினை ஒவ்வொரு குச்சிகளால் செதுக்குவது போல முஸ்லிம்களின் தனித்துவ இருப்பிற்காய் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமே சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்....

இனி விடயத்திற்கு வருவோம். உங்களை தலைவர்களாக உருவாக்கிய யாரும் இப்பொழுது உங்களுடன் இல்லை. அதாஉல்லா ஹிஸ்புல்லாஹ் றிஷாட் பதியுதீன் பஷீர் சேகுதாவூத் ஹஸனலி என பெரும் பட்டியலினை போடலாம். உங்கள் கொள்கைகள் நடவடிக்கைகள் மீது அதிருப்தியுற்று வெளியேறிய இவர்களின் சேவைகளை நீங்கள் நினைவு படுத்த வேண்டும். அவை உங்களின் ஆளுமையினை அளவிட உதவலாம்...

முழு கிழக்கிற்கும் அதாஉல்லா செய்த சேவைகளில் ஒரு துளி கூட உங்களால் செயற்படுத்த முடியவில்லை ஹிஸ்புல்லாஹ் செய்த சேவைகளின் பக்கம் உங்களால் கடக்கவும் முடியாது றிஷாத் பதியுதீனின் செயற்பாடு பக்கம் உங்களால் நகரக் கூட முடியவில்லை. ஆனால் அஷ்ரப் எனும் பெருத்த சிந்தனை வாதியின் கட்டமைப்பின் கீழ் வடிவமைக்கப்பட்ட அந்த ஸ்தாபனம் உங்களுக்கு கை கொடுத்தது. கொடுத்துக் கொண்டும் இருக்கிறது. மிக அவதானமாக நீங்கள் இருக்க வேண்டிய சூழல் இப்பொழுது வந்தும் இருக்கிறது...

முஸ்லிம் பெயர் தாங்கிய இக் கட்சியினை பல சுக்குநூர் துண்டுகளாக உடைத்து இன்று அடிமட்ட அரசியல் நிலைக்குள் தள்ளியிருக்கிறீர்கள். பதவி மோகங்களும் அரசியல் வியாபாரமும் ஜொலிக்கின்ற கம்பெனியாக முஸ்லிம் காங்கிரஸ் உங்களால் மாற்றப்பட்டிருக்கிறது. எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதே நோக்கத்திலிருந்து முற்று முழுதாக விலகி உள்ளூட்டுச் சண்டையிலே காலத்தை கழிக்கிறீர்கள். புனிதமான அல் - குர்ஆனையும் ஹதீஸையும் காரணம் காட்டி முஸ்லிம் அரசியலை பெரும்பாண்மை சமூகத்திற்கு முன்னால் மண்டியிட வைத்திருக்கிறீர்கள். உரிமையின் குரலாகவும் தேவைகளின் நிறை பொருளாகவும் இயங்க வேண்டிய இத் தாபனத்தை இஸ்லாமிய ஷரீஆ வெறுக்கின்ற கலாச்சாரத்தின் இருப்பிடமாக மாற்றியிருக்கிறீர்கள். ஒரு புனிதமிக்க அமானிதத்தை துஷ்பிரயோகம் செய்த உங்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது...

காலத்திற்கு காலம் முடிவினை மாற்றுகின்ற முனாபிக் தனமாக செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கிறீர்கள். தேசியப் பட்டியல் தொட்டு இனத் தீர்வு வரையான எந்தப் பிரச்சினையும் உங்களால் தீர்க்க முடியவில்லை. உங்களையும் உங்களது அரசியலையும் நம்புகின்ற யாரும் பாராளுமன்றத்திலோஇ அரசியல் அதிகாரத்திலோ இல்லை. பெரும்பாண்மை தொட்டு சிறுபாண்மை பிரதிநிதிகள் வரை உங்கள் மீதான கணிப்பீடு மிக மோசமாகவே உள்ளது. கொள்கை விடயம் தொட்டு சொந்த விடயங்கள் வரை அரங்கேற்றத்திலே அனைத்தும் அவதிப்படுகின்றன...

நீங்கள் முஸ்லிம்களின் தனித்த தலைவராக நியமிக்கப்பட்டவர். உங்களின் அரசியல் அறிவும் சாணக்கிய முடிவும் இன்றைய காலத்தில் நகைச்சுவையாய் பார்க்கப்படுகிறது. ஒரு முஸ்லிம் தலைவரின் இவ்வகையான நிலையினை நினைத்து நாங்கள் பெரும் கவலை கொள்கிறோம். நீங்கள் இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். உங்களது இருப்பிற்காக முழுச் சமூகத்தையும் அடமானம் வைப்பது அவ்வளவு உசிதமானதல்ல. இரவில் தூங்குகின்ற போது உங்கள் மனம் விம்பி அழ வேண்டும். சமூகத்தை அடமானம் வைக்கின்ற பழிக்காக நீங்கள் தொழுகையில் பிராத்தனையில் ஈடுபட வேண்டும். கௌரவமாக ஒதுங்கிக் கொள்வதும் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம்...

உங்களைச் சுற்றி இருப்பவர்களை நன்கு உற்றுப் பாருங்கள். தேசியப் பட்டியலுக்கும் அதிகார ஆசைக்கும் கும்மாளமிடும் கூட்டமே அது. மிக ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் கண் அயர்கின்ற போது ஒரேயடியாக தூக்கி விடுவார்கள். 'அண்ணன் எப்ப காலியாவார் திண்னை எப்ப காலியாகும்?' என்று எதிர்பரர்த்து நிற்கும் கூட்டமது. விசுவாசம் சற்றும் இல்லாத நச்சுப் பாம்புகளே உங்களைச் சுற்றி உள்ளன. நீங்கள் எப்பொழுதும் பாம்புகளுக்கு இறையாகலாம்...

உங்களால் ஒரு விடயத்தை பொறுப்பை சரிவர செயற்படுத்த முடியாவிடில் அதனை தகுதியான ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு மிக கண்ணியத்துடன் வெளியேறிவிடுங்கள். அதுதான் நபி வழியும் மிக அழகானதும் கூட. ஆரம்ப காலத்தில் உங்களை நம்பியே அவர்கள் கட்சியை ஒப்படைத்தனர். அவர்களுக்கு உங்கள் மீது அபரிதமான நம்பிக்கை இருந்தது. அனைத்தையும் நீங்கள் முறியடித்து விட்டீர்கள். நீங்கள் ஒரு முஸ்லிமாக முஃமினாக இருக்க முடியும். ஆனால் முஸ்லிம்களுக்கோ முஃமின்களுக்கோ தலைவராக இருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்...

உங்கள் மேடைகளையும் அங்கு பேசுபவர்களையும் நீங்கள் அவதானித்தீர்களா? எப்படியெல்லாம் வசை பாடுகிறார்கள் நயவஞ்சக வார்த்தைகளை பேசுகிறார்கள் நாகரீகமற்ற முறையிலே கதைக்கிறார்கள். இதுவா நீங்கள் கட்சி வளர்த்த முறை? இப்படியா முஸ்லிம்களுக்கான உரிமையினை பெறுவது? இதுவா இப்பொழுது எமக்கிருக்கின்ற முக்கியமான தேவை?

இதுவரை காலமும் முஸ்லிம் சமூகத்திற்கான உரிமையாகவோ அபிவிருத்திகளிலோ உங்களால் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஒரு விடயத்தினை கூற முடியுமா? இதனை வாதமாகவோ அரசியல் விவாதமாகவோ நோக்காமல் மனசாட்சியின் உண்மையிடம் கேட்டுப்பாருங்கள். அது என்ன பதில் கூறுகிறதோ அதுவே உங்களின் நிலையும் கூட.

சிந்தித்து முடிவெடுங்கள். கௌரவமான செயற்பாடே உங்களின் உயர்விற்கு வழிவகுக்கும். மாற்றத்தினை நீங்கள் விரும்பாவிடில் அதற்கான பிரதி பலனையும் நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். அதுவே கர்மா.

அக்கரைப்பற்று சஜீத்

Post a Comment

Previous Post Next Post