நல்லாட்சி அரசில் முஸ்லிம் மக்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தனது காரியாலயத்தில் நேற்று முஸ்லிம் பிரதிநிதிகளுடன் மே தினம் தொடர்பில் நடத்திய விசேட சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "பத்து வருடங்கள் நாட்டை நான் ஆட்சி செய்தேன். எனது காலத்தில் இனவாதம் எப்போதும் தலைதூக்கவில்லை. 2012ஆம் ஆண்டு சம்பிக்க ரணவக்கவே புர்கா மற்றும் ஹலால் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார்.
2014ஆம் ஆண்டு தேர்தல் வருவதை அறிந்துகொண்டு அவ்வருட நடுப்பகுதில் அளுத்கம கலவரத்தை திட்டமிட்டுச் செய்துள்ளார்கள். நாம் இது தொடர்பில் தெளிவுபெறும்போது பஸ் போய்விட்டது.
ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒருவரே ஞானசார தேரரை ஏவிவிட்டு கோட்டாபயவை பொதுபலசேனாவின் காரியாலயத் திறப்புக்கு அழைத்து மாயையான தோற்றம் ஒன்றை உருவாக்கி முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரித்தார்.
இன்று நாட்டில் முஸ்லிம் விரோதச் செயற்பாடுகள் எமது ஆட்சிக்காலத்தில் இல்லாத அளவு அதிகரித்து விட்டன. எம்மீது ஏவிவிட்டு முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரித்த பேயை இன்று அவர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த நல்லாட்சி அரசு முஸ்லிம்களிடம் எம்மை எதிரிகளாக சித்தரித்து முஸ்லிகளின் இருப்பை இன்று கேள்விக்குள்ளாக்கி வருகின்றது. எம்மை எதிரியாகப் பார்த்து முஸ்லிம்கள் தங்கள் இருப்புக்களை இழந்துவிடக்கூடாது.
அளுத்கம கலவரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்தால் அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.
இல்லாவிட்டாலும்கூட உண்மை ஒருநாள் வெளியே வரும். அதனைப் பல நாட்கள் ஒழித்து வைக்க முடியாது. உண்மை வெளிவரும் நாளில் இந்த நாட்டு முஸ்லிம்கள் தங்கள் தலையில் கையை வைப்பார்கள்.
உண்மையான துரோகிகள் யார் என்பதையும், அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து ஆட்சிப்பீடம் ஏறியவர்கள் யார் என்பதையும் அப்போது அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்" என மேலும் தெரிவித்துள்ளார்.