Headlines
Loading...
சிரிய மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலன்கள்!

சிரிய மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலன்கள்!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட மிக மோசமான வான் வழி நச்சு இரசாயன தாக்குதலில் 11சிறார்கள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 உயிரிழப்புகள் நூறைத் தாண்டக் கூடும் என ஐ.நா. சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் பொது மக்கள் என்று மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. 

இந்த  நச்சுவாயுத் தாக்குதலினைத் தொடர்ந்து கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டிலுள்ள வைத்தியசாலைகள் காயமடைந்தோரால் நிறைந்துள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலைப் பொழுதில் கான் ஷேக் ஹெளன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச ரீதியில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு யுத்தக் குற்றத்திற்கான சாத்தியப்பாடு இருப்பதால் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் உயிர் தப்பியோருக்கு சிசிக்சை அளித்துக் கொண்டிருந்தோரை குறிவைத்து விமானத்தில் இருந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரசாயன தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டால், சிரியா போர் தொடங்கி நடந்து வரும் இந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் கொடிய இரசாயன தாக்குதலாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்த மோசமான தாக்குதல் குறித்து நேற்று விவாதிக்கப்பட்டுள்ளதுடன் இது ஒரு யுத்தக் குற்றம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிரியாவின் ஆட்சியாளர் பஷர் அல் அஸாதின் கொடுங்கோல் ஆட்சியில் இதுவரை நான்கரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இலட்சம் பேர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். 22 மில்லியன் பேர் வீடுகளை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர். 

சிரியாவில் போர் நிறுத்தத்தை கடைப்பிடித்து அமைதியை நிலை நாட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கோள்ளப்பட்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை. இந் நிலையில் அஸாத் தரப்புக்கு ஈரானும் ரஷ்யாவும் தொடராக ஆதரவையும் அனுசரணையையும் வழங்கி வருகின்றன. இதுவே அஸாத் எதுவித அச்சமோ மனிதாபிமானமோ இன்றி இவ்வாறான பாரிய மனிதப் படுகொலைகளை அரங்கேற்றக் காரணமாகும்.

சிரியா விடயத்தில் சகல நாடுகளும் தலையிட்டு அப்பாவிப் பொது மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும். இன்றேல் இவ்வாறான படுகொலைகள் தொடர்வதை தவிர்க்க முடியாது போய்விடும். அதிகார வெறியின் கால்களின் கீழ் மனிதம் நசிபட்டுச் செத்துக் கொண்டிருக்கிறது. இந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் கொடுங்கோலர்கள் அழிந்து உலகில் அமைதி தவழவும் இருகரமேந்திப் பிரார்ர்த்திப்போம். 

0 Comments: