Top News

மரிச்சுக்கட்டியை தொடர்ந்து இனவாதிகள் நிகழ்ச்சி நிரலில் இருப்பது நுரைச்சோலை!

கடந்த புதன்கிழமை பெருவாரியான ஊடகங்களில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கு பகிரங்கமடல் ஒன்றினை வெளியிட்டிருந்த விடயம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

குறித்த கடிதத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் அமைச்சர் றிஷாட் அவர்கள்  அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் காணி உரிமைகள் தொடர்பான அபிலாஷைகளுக்கு வேட்டு வைக்கும் நடவடிக்கையாகவும் அதேநேரம் பேரினவாதிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளை அடியொற்றியதான நடவடிக்கையாக அமைந்திருப்பதாகவும், அமைச்சர் றிஷாட் அவர்கள் தனது சொந்த மாகாண  மக்களுடைய காணிப் பிரச்சினை தொடர்பில் தோல்வி கண்டிருக்கும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகளைப்பற்றி அறியாமல் அதுதொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்த்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார்.

உண்மையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களின் இந்த கருத்தானது முற்றுமுழுதாக மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்தாகும். ஆனால் அதைத்தொடர்ந்து அவரால் குறிப்பிட்ட மற்றவிடயங்கள் கேள்விக்குற்படுத்த வேண்டியதாகும்.
ஆனால் முஸ்லிம் தேசிய அரசியலில் சகோதரர் றிசாட் பதியுதீன் அவர்களை கிழக்கிற்குள் அரசியல் ரீதியில் நுழைவதை அனுமதிக்க முடியாது என்று கருத்துப்பட சில விடயங்களை சுட்டிக்காட்டியமை ஜனநாயக அரசியலுக்கு பொருந்தாத ஒரு விடயம் என்பதையும் சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களுக்கு எத்திவைக்க விரும்புகிறேன்.

குறிப்பாக நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தில் உள்ள பிரச்சினையை குறிப்பிட்டு அந்த பிரச்சினைக்கான காரணமாக இனவாதிகளை விரல் நீட்டுவதானது கடந்தகாலத் தவறை மறைத்து யாரைக்காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள், என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வியாகும். 

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்களினால் கட்டப்பட்ட நுரைச்சோலை வீடுகள் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையாமல் இருப்பதற்கான உண்மையான காரணங்களை மறைப்பதில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் மட்டுமல்ல தற்போதுள்ள மு.கா தலைவரும் அந்தக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர், இவர்களுக்குள் அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டபோதும், நுரைச்சோலை வீட்டுத்திட்ட விவகாரத்தை பொருத்தவரையில் ஒருவகையான ஒற்றுமையையே இவர்கள் தொடர்ந்தும் கையாண்டு வருவது மேலும் இந்த விடயத்திலுள்ள உண்மைத்தன்மையை ஆராயத் தூண்டுகிறது.

உண்மையில் இந்தப் பிரச்சினையானது, இன்று நேற்று உருவான ஒன்றல்ல மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் காலப்பகுதியில் பொன்னன் வெளிக்காணிப் பிரச்சினையை மையமாக கொண்டே, அதைப் பின்தொடர்ந்து வந்த பிரச்சினைகளாகும்.

சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் இருந்த ஜே.வி.பி பின்னனியில் சிங்கள இனவாதிகளால் சூறையாடப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான பொன்னன் வெளிக்காணிகள் அபகரிக்கப்பட்ட போது அந்த காணிகளை மீற்பதில் மர்ஹூம் அஸ்ரப் மிகவும் பாடுபட்டார். ஆனால் அவரால் அந்தக் காணிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனவாதிகளிடமிருந்து பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது. இருந்த போதும் காணிகளை இழந்த முஸ்லிம்களின் நிலையை ஆராய்ந்த அம்மையார் அன்றிருந்த சிங்கள இனவாதிகளை நொந்து கொள்ளாமல் இனவாதிகளால் கைப்பற்றப்பட்ட  பொன்னன் வெளி காணிகளுக்கு பதிலீடாக தீகபாவிக்கு அண்மித்த பகுதியான பல்லக்காடு என்ற அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை வழங்க, சந்திரிக்கா அம்மையார் சம்மதித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து "பல்லக்காடு" காணிகளை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தை ஒலுவிலில் பிரமான்டமான பொதுக்கூட்டமாக மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மட்டுமல்லாமல் அந்த கூட்டத்திற்கான அழைப்பிதல் விளம்பரப் பதாகைகளாக தமிழ்,சிங்கள மொழிகளில் நாட்டின் பலபகுதிகளில் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. அந்த சுவரொட்டிகள் அன்றிருந்த சோமவன்ச தேரர் தலைமையிலான இனவாதிகளின் கண்களிலும் அகப்பட்டது,பின்னாளில் அதுவே பலவிடயங்களை மர்ஹூம் அஸ்ரப் வரிந்து கட்டிக்கொண்டு இனவாதிகளை ஆசுவாசப்படுத்த புறப்பட காரணமாகவும் அமைந்தது.

குறித்த சுவரொட்டி அன்று மர்ஹூம் அஸ்ரப் அவர்களை மிகப்பெரிய ஒரு இனவாதியாக சிங்களப் பெரும்பான்மையர் மத்தியில் 
அடையாளப் படுத்தப்பட்டு அது தொடர்பில் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் சிங்கள பௌத்த தேரருடன் தான் ஒரு இனவாதியல்ல என்பதை நிரூபிப்பதற்கான தொலைக்காட்சி விவாதம் வரை கொண்டுவந்து நிறுத்தியும் இருந்தது.

மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் நாட்டைப் பிடிக்கிறார். காடுகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றம் செய்கிறார்.  என்ற கோசத்துடன் சோமவன்ச தேரரும் அவருடன் அன்றிருந்த இனவாதிகளும் அம்பாறைக்கு படையாக வந்திறங்கி "சத்தியாக்கிரகத்தில்" ஈடுபட்டனர். அன்றுவரை இந்த விடயத்தை என்னவென்றே கண்டு கொள்ளாத அம்பாறை சிங்கள மக்கள் மத்தியில் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் இந்த நடவடிக்கையை மிகப்பெரிய இனவாதமாக காட்சிப்படுத்தப்பட்டு ஜே.வி.பியினரின் தலைமையில் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்று, கடைசியில் அந்தக் காணிகள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க விடாமல் தடுக்கப்பட்டது. அதனால் காலகட்டத்தில் சந்திரிக்கா அம்மையார் கூட மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் இந்த நடவடிக்கையை கண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. (இன்றுவரை அந்தக் காணிகளை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்கவில்லை.)

அதைத்தொடர்ந்து மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்கு சிங்கள இனவாதிகள் மத்தியில் செல்வாக்கு சரிந்து, தான் ஒரு இனவாதியல்ல என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தையும், தேவையையும் உருவாக்கியது. பிற்காலத்தில் தீகபாவி என்கிற புனித பிரதேசம் உருவாகவும் அது காரணமாக அமைந்தது.

தனது அமைச்சின் கீழ் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் தீகபாவியை அபிவிருத்தி செய்கிறார். அன்றைய காலப்பகுதியில் அம்பாறையில் இருந்த  சிங்கள சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தயாரத்ண, சோமரத்ண மட்டுமல்ல  இவர்களுக்கு முன்னிருந்த டி.எஸ். சேனாநயக்க போன்றவர்கள் கூட செய்யத்துணியாத ஒரு காரியத்தை அஸ்ரப் தன்னுடைய சொந்த முயற்சியில் முன்நின்று செய்தார். அநுராதபுரத்திக்கு நிகரான பௌத்த விகாரையை அமைத்து தீகபாவியை புனிதப் பிரதேசமாக பிரகடனம் செய்யும் அளவுக்கு அங்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார். அதன்விளைவாக மேற்சொன்ன பல்லக்காடு, நுரைச்சோலை என முஸ்லிம்களுக்கு வழங்கப்படவிருந்த காணிகள் தீகபாவி புனிதப் பிரதேசத்திற்குள் சந்திரிக்கா அம்மையாரினால் உள்ளடக்கப்பட்டது.
மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் இந்த நடவடிக்கை சிங்கள மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றபோதிலும் அதில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கவனிக்க தவறிவிட்டார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகள் இப்புனித பிரதேசத்திற்குள் அடங்குகின்றது.

பின்னாளில், இந்த விடயத்தை சரிவர ஆராயாமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைஅமைக்க தீகபாவியின் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட  நுரைச்சோலையில் பேரியல் அம்மையார் அவர்கள் வீடுகளை கட்டி முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த சிங்கள இனவாதிகளும் நமது இப்போதைய முஸ்லிம் தலைமைகளும் இது சம்பந்தப்பட்ட விடயத்தை விரிவாக பேரியல் அம்மையாருக்கு தெளிவுபடுத்தவில்லை என்றே கூறவேண்டும். ஒருவாறு கட்டிமுடிந்ததன் பின்னரே அந்த வீடுகளை சிங்கள இனவாதிகள் உரிமம் கொண்டாடி இன்று அது நீதிமன்றம் வரை விவகாரம் சென்று, தற்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் குடியேர முடியாத நிலையை தோற்றுவித்திருக்கிறது.

உண்மையைச் சொல்லப்போனால் மேற்சொன்ன இந்த விவகாரம் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் காலத்தில் அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களுக்கோ அல்லது மு.கா தரப்பினர்களுக்கோ தெரியாத ஒன்றல்ல இதைவிடவும் இந்த நுரைச்சோலை விடயத்தில் உள்ள கடந்த கால வரலாற்று தவறுகளை ஆழம் அகலமாக தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அம்மையார் பேரியல் அவர்களுடன் இருந்த அரசியல் போட்டி காரணமாக அது அத்தனையையும் இவர்கள் மறைத்துவிட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ அப்பாவி முஸ்லிம் மக்கள் தான், அவர்கள் இன்றுவரை நிரந்தர வீடுகளின்றி தவிக்கிறார்கள். 

அன்று மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் செய்த அந்த காரியம், (நுரைச்சோலை பகுதியும் தீகபாவி புனித பூமிக்குள் உள்வாங்கப்பட்ட அந்த விடயத்தை) இன்றுவரை வெளிக்கொண்டுவராமல் கட்டப்பட்ட வீடுகள் தொடர்பில் அரசாங்கத்திடம் பேசிப் பெற்றுத்தருவதாக கூறி மர்ஹூம் அஸ்ரப் அவர்களை  நியாயப்படுத்தி அரசியல் லாபம் தேடுவதன் விளைவாக இந்த உண்மையை வெளியில் கொண்டுவராமல் பின் நிற்பதுமட்டுமல்லாமல், இவைகளை மறைக்க மக்களை ஏமாற்றும் அறிக்கைகளை காலத்திற்கு காலம் விட்டு இவர்கள் அரசியல் வியாபாரம் செய்கிறார்கள்.

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் உள்ளூராட்சி மாகாண அமைச்சராக மஹிந்த அரசின் செல்லப்பிள்ளையாக இருந்த அதாவுல்லாஹ் அவர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு கடிதம் எழுதுவதற்கு முதலில் அவர் அவரை சுயவிசாரணை செய்திருக்க வேண்டும். அன்று பலம் பொருந்திய அமைச்சராக விருந்த சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களினால் நுரைச்சோலை வீட்டுத்திட்ட பிரச்சினையை ஏன் முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனது, என்று?!

உண்மையில் சொல்லுவதற்கு வேதனையாக இருந்தாலும் ,யதார்த்த பூர்வமாக இந்த விடயங்களை ஆராய்ந்த வரையில் அன்றிருந்த இனவாதிகளின் எச்சங்களான இப்போதுள்ள ஞானசார தேரராக இருக்கட்டும் அல்லது ஆனந்த தேரராக இருக்கட்டும் இந்த நுரைச்சோலை வீடுகள் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடம் கொடுக்கப் போவதில்லை, என்ற உண்மையையும் அதன் பின்னனியில் இனவாதத்தை மாத்திரம் அரசியல் மூலதனமாக கொண்ட சில பலம் பொருந்திய சிங்கள அமைச்சர்களும் காரணமாக இருக்கிறார்கள். என்பது ஒன்றும் புதிய விடயமல்ல, தற்போது வடக்கில் உள்ள முஸ்லிம்களின் காணிகளை வனப்பகுதியாக சுவீகரிக்க செய்த கையோடு அவர்கள் படையெடுக்க இருக்கின்ற அடுத்த இடம் தீகபாவிதான் என்றால் அது மிகையாகாது. எனவே உண்மைகளை புரிந்து சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருக்காமல், முஸ்லிம் தலைவர்கள் தூரநோக்குடனான சில வழிமுறைகளை கையாளுவது சமூகத்திற்கு விமோசனத்தை தர வழிவகுக்கும். தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது மீண்டும் மீண்டும் தவறு செய்யத் தூண்டுவதற்காக அல்ல என்பதையும் செய்த தவறுகளில் இருந்து மீள்வதற்காகவும், இனிமேலும் இப்படியான தவறுகளை முஸ்லிம் தலைமைகள் தொடரக்கூடாது என்பதற்காகவுமாகும்.

அஹமட் புர்க்கான்
கல்முனை...

Post a Comment

Previous Post Next Post