இரசாயன வாயு தாக்குதல் மூலம் அப்பாவி மக்களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படையினரின் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இதற்கு பதில் தாக்குதலை அமெரிக்க படை எல்லை மீறி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். சிரியாவின் இட்லிப் பகுதியில் அந்நாட்டு அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன வாயுத் தாக்குதலில் அப்பாவியான பொதுமக்களே பலியாகினர். இதற்கு பதில் தாக்குதலை அமெரிக்கப்படையினர் மேற்கொண்டதிலும் பொதுமக்களே உயிரிழந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது, சிரியாவின் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் இட்லிப் பகுதியில் அந்நாட்டு படையினர் மேற்கொண்ட இரசாயன வாயு தாக்குதல் மிகவும் கொடூரமானதே.
இத்தாக்குதலுக்கு இலக்கான 30 குழந்தைகள் உள்ளிட்ட 86 பேர் உயிரிழந்தனர். அத்துடன் நூற்றுக்கணக்கானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது மிகவும் கொடூரமான தாக்குதலாகும். இந்த தாக்குதல் குறித்து அரபு நாடுகள் மெளனம் காப்பது கவலைக்குரியதே. சவூதி பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அவர்கள் அசாத் மற்றும் ரஷ்யாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு இரசாயன தாக்குதலுக்கு பதில் தாக்குதல் வழங்கிய அமெரிக்காவின் நடவடிக்கைககு ஆதரவளித்திருக்கின்றனர்.
இரண்டு தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவற்றால் மனிதநேயம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதுடன், மிகக் கொடூரமான யுத்தக் குற்றமும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அணிசேரா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் கண்டனமும் வெளியிடவில்லை.
எனவே அசாத்-ரஷ்ய கூட்டுப்படையினரின் தாக்குதலையும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் கண்டித்து இலங்கை அரசாங்கம் பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தினார்.
Post a Comment