வில்பத்துவில்
முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு
தீர்மானத்தையும் ஜனாதிபதி எடுக்கவில்லை. ஆகையால் ஜனாதிபதியின்
வர்த்தமானியை மீளப்பெறமாட்டோம். எனினும் வில்பத்து பிரகடனத்தினை
வைத்து ஜனாதிபதிக்கு எதிராக செயற்படும் அரசியல் கும்பலொன்று
உள்ளது. இதன் பின்னணியில் முஸ்லிம் இனவாத கும்பலும்
தொடர்புபட்டுள்ளது. இவர்கள் யார் என்பது எனக்கு தெரியும்.இந்த
மறைந்து தாக்கும் கும்பல் விரைவில் வெளிவரும். முதுகெலும்பு இருந்தால்
மறைந்திருக்கும் அரசியல் கும்பல் வெளிவர வேண்டும் என விளையாட்டு துறை
அமைச்சர் தயாசிறி ஜயசேகர சவால் விடுத்தார்.
அத்துடன்
வில்பத்து வர்த்தமானிக்கும் ரஷ்யாவிற்கும் எவ்வித தொடர்பும்
கிடையாது. வில்பத்துவில் முஸ்லிம்களின் கிராமங்கள் எதுவும்
உள்ளடக்கப்படவில்லை. எனினும் ஒரு முஸ்லிம் இணையத்தளத்தில் ஒரு
இலட்சம் ஏக்கர் காணியை வில்பத்து வன பிரதேசமாக ஜனாதிபதி
பிரகடனப்படுத்தியதாக தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
நாராஹேன்பிட்டியில்
அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த வெள்ளிக்கிழமை
நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வில்பத்து வன பிரதேசத்திற்கு உரித்தான 4 பகுதிகள் வன பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது .
வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் படி மாவில்லு, வெப்பல், கரடிக்குழி,
மறிச்சுக்கட்டி, இளத்திகுளம், பெரியமுறிப்பு என்பவை ஒன்றிணைந்து
மாவில்லு வனமாக பிரகடனப்படுத்த வேண்டியிருந்தது. எனினும் இதனால்
முஸ்லிம்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
இதனை
வனமாக பிரகடனப்படுத்தப்பட்டால் முஸ்லிம்களின்
வணக்கஸ்தளங்களுக்கோ, வீடுகளுக்கோ, குடியிருப்புகளுக்கோ
எந்தவொரு பாதிப்பும் இல்லை. மக்கள் குடியிருப்பு பகுதிகள் வன
பாதுகாப்பு பிரதேசங்களுள் உள்வாங்கப்படவில்லை.
யுத்ததின்
காரணமாக இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பில்
எனக்கு நன்கு தெரியும். வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும்
என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி தொடர்ந்தும் உள்ளார். அவருக்கு
வாக்களித்து ஆட்சி பீடம் ஏற்றியது தமிழ், முஸ்லிம்களாவர்.
எனினும்
நாட்டின் வன பாதுகாப்பு பகுதிகள் 25 சதவீதமாக குறைவடைந்து
வருகின்றது. பேண்தகு அபிவிருத்தியில் வன பாதுகாப்பு பிரதேசம்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனினும் ஜனாதிபதியின்
தீர்மானங்களை சிலர் திரிபுபடுத்தி காட்ட முனைகின்றனர்.
ஜனாதிபதிக்கு
எதிராக முஸ்லிம்களை தூண்டுவதற்கு சிலர் திட்டமிட்டு
வருகின்றனர். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாம்
ஈடுபட்டு வருகின்றோம். எனினும் முஸ்லிம்களைத் தூண்டும் வகையில் சில
செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது .
ஜனாதிபதிக்கு
எதிராக பல கும்பல்கள் தற்போது உருவாகி வருகின்றன.இந்த கும்பல்
ஜனாதிபதிக்கு எதிராக முஸ்லிம்களையும் தமிழர்களையும் தூண்டி
விடுவதில் குறியாக உள்ளது. வில்பத்து வனத்தின் பாதுகாப்பு
பிரதேசமாக 600 ஏக்கர் காணிகளே பிரகடனப்படுத்தப்பட்டு ள்ளது.
ஜனாதிபதிக்கு
எதிராக முஸ்லிம்களை தூண்டிவிடும் செயற்பாடுகளின் பின்னணியில்
பெரும் அரசியல் கும்பல் உள்ளது. உள்ளே மறைவாக இருந்து கொண்டு
ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் அந்த கும்பல் இன்னும் வெளியே வரவில்லை. அந்த கும்பல் யார் என்பது
எனக்கு நன்கு தெரியும். முதுகெலும்பு இருந்தால் அந்த கும்பல்
ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த வேண்டும்.
எனினும்
இதில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்புப்பட்டுள்ளதாக நான் கூறவில்லை.
சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குரிய வேலைகளை செய்து
வருகின்றன. மேலும்
வில்பத்து வர்த்தமானிக்கு ஜனாதிபதி ரஷ்யாவில் கைச்சாத்திட்டதாக ஊடகங்கள்
வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வர்த்தமானி அறிவித்தலுக்கும்
ரஷ்யாவிற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவசரமான வர்த்தமானிகளில்
இப்படி கைச்சாத்திடுவது வழக்கமாகும் என்றார்.