Top News

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேற அமைச்சர் ரிசாத் உதவி

மருதங்கேணிக்குளம் இடம்பெயர்ந்தோர் விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வொன்று இவ்வமைப்பின் செயலாளர் எம்.பி.எ.சமீம் தலைமையில் பெரியநீலவனையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி துல்கர் நயீம் அதிதியாக கலந்துகொண்டார்.

மருதமுனை, பெரியநீலாவனை பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 35 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாவலடி மேவான்குளம் பிரதேசத்தில் மீள்குடியேறி வசித்து வருகின்றனர். 1980களில் மேற்படி வாகரை பிரதேச எல்லைக்குள் பல முஸ்லிம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு வசித்து வந்தனர்.  பின்னர் ஏற்பட்ட பயங்கரவாதத்தின் காரணமாக தாங்கள் வசித்த இடங்களை இம்மக்கள் விட்டுச் சென்றிருன்தனர்.

மீண்டும் தற்போது பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இம்மக்கள் மீளக்குடியேறி வசித்து வருகின்றனர். ஆனபோதிலும் இவர்களுடைய அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படாத நிலையிலேயே இவர்கள் வசித்து வருகின்றனர்.
ஏற்கனவே இம்மக்கள் மீளக்குடியமர்த்தப் படும்போது காணிகளை புனரமைப்பு செய்வதற்காக  அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் ஐந்து இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கியிருந்தார். அதன் பின்னர் தங்களுக்குரிய காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட இம்மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி மிக மிக கஸ்ட்டப்படுகின்றனர்.

எனவே மேற்படி பிரதேசத்தில் வாழ்வதற்கேற்ற அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், போக்குவரத்துப் பாதை என்பவற்றோடு பயிர் செய்வதற்குரிய நீர்ப்பாசனம் என்பவற்றை பெற்றுத்தருமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர். மருதங்கேணிக்குளம் இடம்பெயர்ந்தோர் விவசாயிகள் அமைப்பின் செயலாளர் எம்.பி.எ.சமீம் தலைமையிலான குழுவினர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களை நேரில் சந்தித்து இக்கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனை அடுத்து தனது இணைப்பாளர் சட்டத்தரணி துல்கர் நயீம் ஊடாக இப்பிரச்சினைகளை கையாள்வதாக உத்தரவாதம் அளித்ததோடு சட்டத்தரணி துல்கர் நயீம் அவர்களிடம் இம்மக்களை சந்தித்து இவர்களின் பிரச்சினைகளையும் குறைகளையும் கண்டறியுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கிணங்க இவ்வமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலும் கலந்துரையாடலும் பெரிய நீலாவணை 25 வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட துல்கர் நயீம் இம்மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டதோடு அவற்றுக்கான தீர்வுகளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊடாகவும் பிரதியமைச்சர் அமீர் அலி ஊடாகவும் கூடிய விரைவில் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தங்கள் குடும்பத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோபூர்வமாக இணைந்து கொண்டதோடு , எதிர்காலத்தில் இக்கட்சியின் வளர்ச்சிக்காக இவ்வமைப்பு கடுமையாக உழைக்கும் என்றும் இவ்வமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post