Top News

அக்குரனையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய சந்தைக் கட்டிடம் திறப்பு


அக்குரனை நகரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நான்கு மாடிகளைக் கொண்ட சந்தைக் கட்டிடமொன்றை நிர்மாணிக்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீட்டை நகர அபிவிருத்தி அமைச்சின் மூலம் பெற்றுத்தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ் தெரிவித்தார்.


முஸ்லிம் சமய விவகாரதபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் தலைமையில் கடந்த திங்களன்று நடைபெற்ற அக்குரனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே நயீமுல்லாஹ் இவ்வாறு தெரிவி்த்தார்.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்குவந்து நூறு நாள் வேலைத்திட்ட காலப் பிரிவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அக்குரனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அக்குரனை நகரை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைச் கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமையவே மேற்படி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான தீர்மானித்தை  அமைச்சர் மேற்கொண்டதாகத் தெரிவித்த அவர் அமைச்சரின் வேண்டுகோளுக்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபை அதற்கான வரைபடத்தைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிலக் கீழ் வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய நான்கு மாடிகளைக் கொண்ட தள மற்றும் முதலாம் மாடிகளில் தலா 18 வீதம் 36 கடைகளும் ஒரு தகவல் பிரிவும், அனைத்து வங்கிகளுக்குமான ATM இயந்திரங்களும் மூன்றாம் மாடியில் அக்குரனை பிரதேச சபைக்கான உப அலுவலகம் மற்றும் காரியாலயங்களும் நான்காம் மாடியில் ஒரு சிறிய கேட்போர் கூடம் மற்றும் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி நிலையம் அடங்கலாக அனைத்து மாடிகளிலும் கழிவறை வசதிகளுடன் கூடிய இக் கட்டிட நிர்மாணத்துக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 320 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அக்குரனை நகர மத்தியிலுள்ள பழைய சந்தைக் கட்டிடத்தை அகற்றுவதற்கும் அவ்விடத்தில் புதிய சந்தைக் கட்டிமொன்றை நிர்மாணிப்பதற்கும் அக்குரனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுத்தருமாறு அதன் இணைத் தலைவர் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களிடம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ் வேண்டுகோள் விடுத்தார். அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக வேலைகளை ஆரம்பிப்பதற்காக மொத்த மதிப்பீட்டில் முதற்கட்டமாக இவ் வருடம் சுமார் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சிறிய கட்டிடமொன்றில் இயங்கிவரும் பிரதேச செயலகத்தையும் உள்ளடக்கக் கூடியதாக கட்டிட வரைபடத்தை முடியுமாயின் மாற்றி அமைக்க அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அறியத்தருமாறு அபிப்பிராயம் தெரிவித்த அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அங்கீகாரத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேற்படி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் சார்பாக எம். நயீமுல்லாஹ் மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) ஏ.சீ.எம். நபீல் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஷபீக் ஹுஸைன்

Post a Comment

Previous Post Next Post