வாங்காமம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த புதன்கிழமை மக்களுக்கு வழங்கப்பட்ட கந்தூரி உணவினை உட்கொண்ட மூவர் உயிரிழந்து, நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் பள்ளிவாசல்களில் நடைபெறும் கந்தூரி வைபவங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடலொன்றினை நடாத்தி சில மிட்டுள்ளார்.
முஸ்லிம் விவகார அமைச்சின் உயர் அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் கந்தூரி வைபவங்களை நடாத்தும் பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குகொள்ளவுள்ளனர்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமின் செயலாளர் எம். எச்.எம். பாஹிம் கருத்துத் தெரிவிக்கையில், கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும். குறிப்பாக தற்போது கந்தூரி வைபவங்களை நடாத்தும் பள்ளிவாசல்கள், தரீக்காக்கள் என்பனவற்றின் ஆலோசனைகள் பெறப்படவுள்ளன.
எதிர்காலத்தில் கந்தூரிகளில் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான உணவு வகைகளை வழங்கும் வகையிலான விதிமுறைகள் அமுலுக்கு கொண்டு வருவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.
இதேவேளை, வாங்காமம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வழங்கிய கந்தூரி உணவை உண்டு பரிதாபகரமாக உயிரிழந்த மூவரின் மரணம் குறித்து அமைச்சர் ஹலீம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். மரணத்திற்கு எவராவது காரணமாக இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட கலந்துரையாடல் விடுமுறைகளின் பின்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment