Top News

துவேசம் அதிகரித்தமையால் முஸ்லிம் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட விளைவு



சப்வான் பஷீர் 

இலங்கையின் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில்
இனவாதம் துளிர்விடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன, ஒன்று
அரசியல், மற்றது பொருளாதாரம்.

இனவாதத்தைப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை ஆயுள்முழுவதும் தக்க வைத்துக்கொள்ள கனவு கண்ட மஹிந்த தரப்பு படுதோல்வியடைந்தது. மஹிந்த தனது தேர்தல் நடவடிக்கை களுக்கு முக்கிய பேசுபொருளாக பயன்படுத்திய "முஸ்லிம் எதிர்ப்புக் கோஷம்" அவருக்கே திருப்பி அடித்தது.

மஹிந்த தனது சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியம்தான் இந்த "முஸ்லிம் விரோத இயக்கங்கள் " இந்த "இனவாதம்" அல்லது "மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்தல்" அரசியல் ரீதியாக தோல்விகண்டாலும் பொருளாதார ரீதியாக பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

முதலில் "ஹலால்" முத்திரை பதித்த உணவுகளை வாங்காதீர்கள் என்று ஆரம்பித்த இந்த எதிர்ப்புக்கோஷம் இன்று "முஸ்லிம் கடைகளுக்கு போகவேண்டாம்" என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.

வியாபாரத்தில் போட்டி, பொறாமை ஏற்படுவதெல்லாம் சாதாரண விடயம்தான்.ஆனால் ஒரு இனத்தின் வியாபார நிறுவனத்துக்கு போக வேண்டாம் என்று இன்னொரு இன மக்களை கட்டாயப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

இந்த சித்திரைப்புத்தாண்டில் "முஸ்லிம்களின் கடைகளை நிராகரியுங்கள்: என்ற கோஷம் மிக நேர்த்தியாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று நேரடியாகவே நாடு முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்களும் பதிவுகளும் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது இவற்றுக்குப்பின்னால்
பொரும்பான்மையினருக்கு சொந்தமான  பிரபல நிருவனங்களின் உரிமையாளர்கள் இருக்கலாம் என்ற ஒரு நியாயமான  சந்தேகம் தோன்றுகின்றது.

இந்த பெருநாள் சீசனில் குறிப்பாக கண்டி நகரில் முஸ்லிம்களின் வர்த்தகத்தில் பாரியதொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் மிக மோசமாக கண்டியின் முஸ்லிம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வியாபார நிறுவனம் தமது சேவை, தரம், நேர்மை மாதிரியான விடயங்களைச் சிறப்பாக செய்து தமது வியாபார நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொள்வார்கள் என்றால் அது எந்த மதத்தினரின் வியாபார நிறுவனமாக  இருந்தாலும் யாருக்கும் பிரச்சினையில்லை.

ஆனால் இங்கே நடப்பது துவேஷத்தை கக்கி, மக்களின் மனங்களை குழப்பி ஒரு சமூகத்தின் வியாபாரத்தை முடக்கி தமது பொக்கட்டை மட்டும் நிரப்பிக்கொள்ளும்ஒரு அநியாயம்.

இந்த அநியாயத்துக்கு நாம்  மத்தியகிழக்கிழிருந்து பெற்றோல் வருகிறது, முஸ்லிம் நாடுகளில் சிங்களவர்கள் வேலை செய்கிறார்கள், இலங்கைக்கு அதிகம் உதவி செய்வது முஸ்லிம் நாடுகள்தான் என்ற பழைய பல்லவியை இன்னும் பாடிக்கொண்டு இருப்பதில்லை எந்த பயனுமில்லை.

இந்த விடயம் குறித்து மிக அவசரமாக முஸ்லிம் அரசியல் வாதிகள், பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்கள், முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கள் எல்லோரும் இணைந்து இந்த அரசுக்கு மிகப்பெரிய ஒரு அழுத்தத்தை செலுத்தவேண்டும்.

இந்த முஸ்லிம் வியாபார எதிர்ப்பு கோஷங்கள் பொதுவெளியில் செய்ய முடியாதவாறு ஒரு சட்டம் அவசாரமாக இயற்றப்பட வேண்டும்.  அவற்றை மீருபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு அரசுக்கு பலமான அலுத்தம் முஸ்லிம் அரசியல் தரப்புக்களால் வழங்கப்படவேண்டும்.

இந்த பிரச்சினையை இப்படியே விட்டால்  நமது சமூகத்தின் இருப்பிலும், பொருளாதாரத்திலும் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.


Post a Comment

Previous Post Next Post