Top News

திறந்த சிறையினுள் அடைக்கப்படும் முசலி தேசம்

பி.எம் முஜீபுர் ரஹ்மான் 

1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதிலிருந்து வடமாகாண முஸ்லிம்கள் அகதி முகாம்களில் கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பவற்றை இழந்து வாழ்ந்தார்கள். சுமார் 20 வருட அகதி, அவதி வாழ்வு ஏதோ ஒரு வகையில் 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் முடிவுக்கு வந்தது.

2010 ஆம் ஆண்டு முதல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு மீளக் குடியேறுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். அதற்காக அன்றைய அரசாங்கமும் பல ஒத்துழைப்புக்களை வழங்கியது.

முசலிப் பிரதேசம் வடமாகாணத்தின் தென் மேற்கு மூலையில் புத்தளம் மாவடத்தின் வடக்காக மன்னார் மாவட்டத்தின் தென் மூலையில் அமைந்துள்ள பிரதேசமே முசலிப் பிரதேசமாகும். இதன் வடக்கு எல்லையாக அருவி ஆற்றையும், தெற்கு எல்லையாக மோதரகம ஆற்றையும் கொண்டது. முசலிப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அனுராதபுர மாவட்டமும் மேற்காக இந்து சமுத்திரத்தையும் கொண்ட ஒரு பகுதியாகும்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு மீள்குடியேறியவர்களில் ஒரு பகுதியினரே மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, அகத்திமுறிப்பு, கொண்டச்சி, வேப்பங்குளத்து முஸ்லிம்களாவர். இவர்கள் தங்களது மீள்குடியேற்றத்திற்கு வில்பத்துவின் ஒரு அங்குளத்தையேனும் ஆக்கிரமிக்கவுமில்லை. அங்கு குடியேறவுமில்லை என்பதை பலமுறை, பல அரசியல் தலைமைகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தெரிவித்துள்ளார்கள்.

இம்மக்கள் வில்பத்துவை ஆக்கிரமிக்கவில்லை, குடியிருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சூழல் அமைச்சர் தற்போதைய மெகாபொலிஸ் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள், வில்பத்து சரணாலயத்திற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என பலமுறை அடித்துக் கூறியுள்ளார்கள்.

அதேபோல், வனவிலங்கு அதிகாரிகள், முக்கிய கல்வியலாளரும், ஆய்வாளர்களுமான கலாநிதி ஹஸ்புல்லா, கலாநிதி ஜெஹான் பெரேரா மற்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு, ஆய்வு ரீதியாகவும் உளவு ரீதியாகவும் செய்திகளையும் கருத்துக்களையும் கூறும் சிங்களப் பத்திரிகைகளான ராவய மற்றும் சில சிங்களப் பத்திரிகைகள் இங்கு வில்பத்து சரணாலயத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அடித்துக் கூறியுள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான், ஜனாதிபதி வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள முசலிப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளான மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பிரதேசங்களை பாதுகாக்கப்பட்ட வனங்களாக இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் '3அ' பிரிவின் கீழ் 'மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்' என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு 24.03.2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ரஷ்ய விஜயத்தினிடையே கையொப்பமிட்டார்.

இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட காடுகளின் எல்லைகளை மாற்ற வேண்டுமாயின் வன பாதுகாப்பு கட்டளை சட்டத்துக்கமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்ட உத்தரவு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரே மேற்கொள்ளலாம். அதற்கமைய மேற்குறித்த வனத்துக்கான உச்ச சட்டபூர்வ பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் முசலிப் பிரதேசத்தின் மொத்த நிலப் பரப்பில் 82 வீதமான நிலங்களை காடுகளுக்குச் சொத்தமாக்கியுள்ளார். எஞ்சியுள்ள ஏனைய பிரதேசங்களில் மூன்றில் ஒரு பகுதியிலேயே மக்கள் குடியிருக்கிறார்கள். ஏனைய இரண்டு பகுதிகளும் விவசாயம் மற்றும் குளங்களாகவே காணப்படுகின்றது. இது முசலிப் பிரதேசத்தின் மீள்குடியேற்றத்தை கடுமையாக பாதிக்கும் செயலாகும்.

தற்போது முசலிப் பிரதேசத்தின் மொத்த சனத்தொகையில் 40 வீதமானவர்களே மீளக்குடியேறியுள்ளார்கள். மீதமுள்ள 60 வீதமானவர்கள் மீள்குடியேற வேண்டியுள்ளது. எனவே, இந்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தல், மீதமுள்ள 60 வீதமானவர்களின் மீள்குடியேற்றத்தையும், மீளத்திரும்பும் உரிமையையும் மறுக்கும் செயலாகும்.

இதன் மூலம், 1990 ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றுகின்ற கொள்கையை முன்வைப்பதற்கு முன்னர், அவர்களின் காணிகளை சுவீகரிக்கும் கொள்கையை முன்னெடுப்பது அழகாகப் புரிகிறிது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது?

திறந்த சிறை வாழ்க்கை

இந்த கடுமையான வர்த்தமானி அறிவித்தல் மூலம் இப்பிரதேசத்து மக்கள் திறந்த சிறைக்குள்தான் அடைக்கப்படுகிறார்கள். இவர்களில் 80 வீதமானவர்கள் விவசாயிகள், ஏனையவர்கள் மீனவர்கள். இந்த விவசாயிகள் வருடத்தின் ஒரு போகமே விவசாயம் செய்வார்கள். இவர்களின் விவசாய நிலங்களுக்கான நீர் இப்பிரதேசத்திலுள்ள பிரதான இரண்டு நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலமே வழங்கப்படுகின்றது. அந்த இரண்டு நீர்ப்பாசனத் திட்டமும் இவ்வர்த்தமானி அறிவித்தல் எல்லைக்குட்பட்டுள்ளது. விவசாயம் செய்கின்ற காலத்தில் இவர்கள் எவ்வாறு நீரை வயல்களுக்கு திறந்து அனுப்புவார்கள்? அக்குளத்தை யார் பராமரித்தல்? அக்குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதும் குற்றமாகும். எனவே, இவ்வர்த்தமானி அறிவித்தல் விவசாயிகளின் முக்கிய விடயங்களைப் பாதிக்கின்றது.

இலங்கையின் அரிசி உட்பத்தியில் சுமார் 6.4 வீதமானவற்றை இந்த விவசாயிகள் வழங்கியிருந்தார்கள். அதுவும் இவ்வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதிப்படைகின்றது. அப்படியாயின் அரசாங்கத்தின் கொள்கை என்ன?
மேலும், இப்பிரதேசத்தில் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்கள் அதிகமான இருக்கின்றார்கள். அவர்கள் பெரும்போக விவசாய காலங்களில் அவர்களது மாடுகளை மேய்ப்பதற்காக சிறிய காட்டுப் பகுதிகளுக்கே கொண்டு செல்வார்கள். அந்த ஆடு, மாடுகளை தற்போது வர்த்தமானி மூலம் காடுகளுக்குச் சொந்தமாக்கியுள்ள பகுதிகளில் நான்கு ஐந்து மாதங்கள் மேயவிடுவார்கள். அதன் பின்னரே அவர்கள் தங்களது வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் எங்கு செல்வார்கள்? அவர்களின் ஆடு, மாடுகளுக்கான உணவினை எங்கிருந்து வழங்குவது. இது மிருகவதை இல்லையா? இவ்வாறா வர்த்தமானி அறிவித்தலானது மிருகங்களின் உரிமையை மறுக்கவில்லையா?

தற்போது வர்த்தமானி அறிவித்தல் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரம், இவ்வாறு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு குறித்த பிரதேசத்திற்கு கொண்டு சென்று, அந்த ஆடு, மாடுகள் கட்டுப்பாட்டை மீறி குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்றால் அம்மாட்டையோ, ஆட்டையோ தேடிச் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் குறைந்தது ஏழு (7) வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் அல்லது நீதிமன்றத்தல் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், இவ்வர்த்தமானி அறிவித்தல் அப்பிரதேச பச்சிளம் குழந்தைகளுக்குக்கூட சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, காட்டு இலாக்காவினால் எல்லையிடப்பட்டுள்ள பகுதிக்கு அருகாமையில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் பந்து விளையாடுகின்றபோது, அப்பந்து தவறுதலாக அவர்களின் காணி எல்லையைத் தாண்டி காட்டுப் பகுதிக்குச் சென்றால், அப்பந்தை எடுப்பதற்காக அச்சிறுவர்கள் காட்டுக்குச் சென்று பிடிபட்டால், ஏழு (7) வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

அதுமாத்திரமன்றி, குறித்த பிரதேசத்தில் மீள்குடியேறுகின்றவர்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்கள். அவர்கள் தங்களது நாளாந்த ஜீவனோபாய தேவைகளுக்காக, சமையல் செய்வதற்காக விறகுகளையே பயன்படுத்துபவர்கள். இங்குள்ள பெண்கள் போதிய அறிவில்லாதவர்கள். அவர்கள் விறகு தேவைக்காக வீட்டுக்குப் பக்கத்திலுள்ள காட்டுக்குச் சென்று விறகுகளை எடுத்தால் அதுவும் குற்றமாகும்.

அத்தோடு, மீள்குடியேறுகின்ற இப்பிரதேசத்தில் இன்னும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கான மலசல கூடம் மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் மீள்குடியேறியுள்ள இம்மக்கள், பெண்கள் தங்களது இயற்கைத் தேவைகளை காடுகளுக்குச் சென்றுதான் நிறைவேற்றிக் கொள்கின்றனர். இவ்வர்த்தமானி அறிவித்தல் மூலம் இப்பாமர மக்கள் தங்களது இயற்கைத் தேவைகளை எங்கு சென்று நிறைவேற்றிக் கொள்வார்கள். அவ்வாறு சென்றால் அதுவும் குற்றம்.

மேலும், எதிர்காலங்களில் இவர்களுக்கு இப்பிரதேச அபிவிருத்தியின் போது அவர்களுக்கான வைத்தியசாலை, பாடசாலை, வாசிகசாலை, பொது விளையாட்டு மைதானம் என்பன அமைப்பதாக இருந்தால் எங்கு அமைப்பது. அல்லது இவர்களுக்கு அவ்வாறான விடயங்களை நிறைவேற்றுவதில்லையா?

எனவே, இவ்வாறான இறுக்கமான சட்டத்தின் மூலம் அவசர அவசரமாக எல்லையிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இம்மக்களை திறந்த சிறைக்குள் அடைப்பது இவர்களின் மீள்குடியேற்றத்தை பாதிக்கும் செயலாகும். எனவே, அரசாங்கம் இவ்வர்த்தமானி அறிவித்தலை மீள்பரிசீலனை செய்து இவர்களின் மீள்குடியேற்றத்தை மனிதாபிமான அடிப்படையில் நோக்கப்பட்டு, இவர்களது மீள்குடியேற்றத்திம், எதிர்காலத் தேவைக்கு நியாயமான தீர்வினை வழங்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post