சவுதியில் தற்பொழுது உருவாகியுள்ள மணல் புயல் காற்று வீசும் நிலைமை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய இக்காலநிலை தொடர்ந்தும் பல நாட்களுக்கு நீடிக்கும் என சவுதி காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இவ்வாறு வேகமாக வீசும் மணல் புயல் காற்று வீசும்போது விமானங்கள் கூட தரையிறக்க முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இந்த மணல் புயல் வீசத் தொடங்கியுள்ளதனால் பொது மக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
விசேடமாக வாகனம் செலுத்தும் போதும், பாதையில் நடந்து செல்லும் போதும் மக்கள் கூடிய அவதானத்துடன் செயற்படுமாறு சவுதியின் காலநிலை மற்றும் சூழல் பாதுகாப்பு அதிகார சபை அந்நாட்டு மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
இந்த காலநிலைகாரணமாக சவுதியிலுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்கள் இரண்டுக்கு விசேட விடுமுறை வழங்க அந்நாட்டு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உம்முல் குரா பல்கலைக்கழகம், அப்துல் அஸீஸ் அல் சுஊத் பல்கலைக்கழகம் என்பன மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.