Headlines
Loading...
மறிச்சுக்கட்டி பற்றி கவலையே இல்லாத ஹக்கீம்

மறிச்சுக்கட்டி பற்றி கவலையே இல்லாத ஹக்கீம்



வில்பத்து பகுதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அண்மையில் கையெழுத்திட்டிருந்தார். இந்த விடயம் இன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது முஸ்லிம்கள் இந்த வர்த்தமானிய அறிவித்தலை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிவில் அமைப்புகள் பொது மக்கள் ஏன் தமிழ் மக்கள் கூட குரல் கொடுக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த விடயம் இவ்வளவு தூரம் கவனயீரப்பைப் பெற்றுள்ளது.

ஆனால் முஸ்லிம்களின் தனித்துவக் கட்சி எனத் தம்மை பறைசாற்றிக் கொள்ளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் இதுவிடயத்தில் இன்னமும் மௌனமாகவே இருக்கின்றனர். வடக்கில் மறிச்சுக்கட்டி மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்துகையில் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் ஊர் ஊராகச் சென்று தமது கட்சிப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதுவா ஒரு முஸ்லிம் தனித்துவக் கட்சித் தலைமையின் அழகு?

இதுவரை வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் பற்றி ஒருவார்த்தையைத் தானும் ரவூப் ஹக்கீம் பேசவில்லை. கல்முனை, பொத்துவில் பகுதிகளில் நேற்று நடந்த கூட்டங்களில் கூட இது பற்றி வாய்திறக்கவில்லை.

வில்பத்து விடயம் என்றால் அதனை ரிஷாட் பதியுதீன் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஹக்கீம் கருதுகிறாரா? அல்லது நாம் அதற்காக பேசினால் ரிஷாடுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று கள்ள மௌனம் சாதிக்கிறாரா ஹக்கீம்?

இது ரிஷாடினதோ அல்லது மறிச்சுக்கட்டி மக்களுக்கோ மாத்திரமான பிரச்சினையல்ல. முழு இலங்கை முஸ்லிம்களுக்குமான பிரச்சினை என்பதை மு.கா. தலைவரும் அதன் எம்.பி.க்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினையில் மு.கா. தலையிட்டு மக்கள் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.