வவுனியாவில் முருகனூரில்
அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் அன்னாசி அறுவடை விழா
நேற்று(28) வயல் விழாவாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில்
பிரதம விருந்தினராக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு
அன்னாசிப்பழ அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
வடக்கு விவசாய
அமைச்சால் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் அன்னாசிச் செய்கை
ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. விவசாயத் திணைக்களத்தின் மாகாண
குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் விவசாயிகளுக்கு
அன்னாசி உறிஞ்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளும் தென்னை
மரங்களிடையே ஊடு பயிர்ச்செய்கையாக அன்னாசியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி
வருகின்றனர்.
தென்னிலங்கையில் இருந்து வரும்
அன்னாசிப் பழங்களைவிட அதிக சுவையுடனும் எடையுடனும் கூடிய பழங்கள் குறைந்த
நீர்ப்பாசனத்துடன் முருகனூர் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில்
விளைவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பயிற்சிகளை அன்னாசி வளர்ப்பாளர்களுக்கு
வழங்கும் நோக்குடனேயே அன்னாசி வயல் விழா நடைபெற்றள்ளது.
வவுனியா
மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற
இவ்வயல்விழா நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை
உறுப்பினர்கள் இ.இந்திரராசா, செ.மயூரன், அ.ஜெயதிலகா, ஜீ.ரி.லிங்கநாதன்,
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு.ரவீந்திரநாதன் , கால்நடை
உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தே.தபோதினி
ஆகியோரும் அன்னாசி வளர்ப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.