அண்மையில் வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள பகுதியை வன பாதுகாப்பு திணைக்களத்துக்கென மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத்தெரிவித்து மறிச்சுக்கட்டி பள்ளிவாசல் முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை 08.04.2017 அன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மஸ்தான் எம்.பியின் வருகைக்கு நன்றி தெரிவித்ததுடன் அவர்களால் நான்கு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
(1)2012 மற்றும் 2017 வர்த்தமானி அறிவித்தலை நீக்குதல்.
(2)1990ம் ஆண்டு முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் எங்கு காணப்பட்டதோ அவ்வாறே மக்களுக்கு மீண்டும் வழங்குதல்
(3)விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பினையும் நம்பி வாழும் மக்களுக்கான நிலங்களை அதிகரித்தல்
(4) வில்பத்து சரணாலயத்துக்கு அருகிலுள்ள சரணாலய எல்லையின் 500 மீற்றர் தூரத்தை1000 மீற்றராக அதிகரித்தல், என்னும் நான்கு கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து மஸ்தான் எம்.பி உரையாற்றுகையில்,
இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக தான் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் அப்போது ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என நினைத்தே தான் வர்த்தமானியில் கையெழுத்திட்டதாகவும், சிலர் தன் மீதான பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான நேரமொன்றினையும் தாம் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த விடையத்தில் அரசியல் இலாபம் தேடுவதை தவிர்த்து மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முனைவதே காலத்தின் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment