Headlines
Loading...
ஜனாதிபதி இனவாதிகளுக்கு அடிபணிந்துள்ளார் : சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப்

ஜனாதிபதி இனவாதிகளுக்கு அடிபணிந்துள்ளார் : சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப்



கே: கடந்த வாரம் ஜனா­தி­ப­தியும் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்­ச­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­க­ட­னப்­ப­டுத்­திய வன பிர­தேச வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு ஏன் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­ப­டு­கி­றது?
ஜனா­தி­பதி காடு  பேணற் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் இந்தப் பிர­க­ட­னத்தை வெளி­யிட்­டுள்ளார். இந்த வர்த்­த­மானி ஏன் அவ­ச­ரப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டது எனச் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக ஜனா­தி­பதி தனது ரஷ்ய விஜ­யத்தின் போதே இந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு கையொப்­ப­மிட்­டுள்ளார். இன­வாத சூழ­லி­ய­லா­ளர்­களின் அழுத்­தங்­களே இதற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. முஸ்லிம் மக்கள் வன பிர­தே­சங்­களை எதிர்க்­க­வில்லை. அவை பாது­காக்­கப்­பட வேண்டும்.

ஒரு பிர­தேசம் வன பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு அப்­ப­கு­தியில் வாழும் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடப்பட வேண்டும். அப்­ப­கு­தியின் காணி உரி­மை­யா­ளர்­களின் கருத்­துகள் பெறப்­பட வேண்டும். மக்­க­ளுக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்டும்.

பிர­தேச செய­லாளர், மக்கள் பிர­தி­நி­திகள், மீள் குடி­யேற்ற அமைச்சு, மீள் குடி­யே­ற­வுள்ள மக்கள் ஆகியோருடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட வேண்டும். இந்த நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டா­மலே வன பிர­தே­ச­மாக அவ­சர அவ­ச­ர­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதனால் முஸ்லிம் சமூ­கமே பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னா­லேயே முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள், புத்­தி­ஜீ­விகள், அர­சியல் பிர­மு­கர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கி­றார்கள்.
கே:  இந்தப் பிர­க­ட­னத்தில் எந்தப் பகு­திகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன? எவ்­வ­ளவு நிலம் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது?
மாவில்லு, வெப்பல், கர­டிக்­குழி, மறிச்­சுக்­கட்டி, விலத்­திக்­குளம் மற்றும் பெரிய முறிப்பு ஆகிய ஒதுக்குக் காடு­க­ளுக்கு உரி­ய­தான காட்டுப் பிர­தே­சமே 2017 மார்ச் 21 ஆம் திக­தி­யி­லி­ருந்து மாவில்லு பேணற்­காடு என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது 40030.525 ஹெக்­டெயர் விஸ்­தீ­ர­னத்தைக் கொண்­ட­தாகும்.

கே: 2012 ஆம் ஆண்டும் காடு பேணற் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்று வெளி­யி­டப்­பட்­ட­தல்­லவா?
ஆம். 2012 மே மாதம் 11 ஆம் திகதி அப்­போ­தைய சுற்­றாடல் அமைச்­ச­ராக இருந்த அநுர பிரி­ய­தர்­சன யாப்­பா­வினால்  பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லின்­படி விளாத்­திக்­குளம் காட்டின் 15000 ஹெக்­டேயர் விஸ்­தீ­ர­னத்தைக் கொண்ட பிர­தேசம் விலாத்­திக்­குளம் ஒதுக்­கக்­காடு என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்தப் பிர­க­டனம் 2012 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வந்­தது. 


கே:  குறிப்­பிட்ட பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் சட்ட ரீதி­யாக குடி­யேற்­றப்­பட்­டார்­களா?
ஆம். ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரை­க­ளுக்­கேற்ப காணிக் கச்­சேரி நடத்­தப்­பட்டு கட்டம் கட்­ட­மாக மக்கள் குடி­யேற்­றப்­பட்­டார்கள். மக்­க­ளுக்கு காணி பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது. இந்தப் பகு­தி­களில் மக்கள் பூர்­வீகக் காணி­களைக் கொண்டிருந்­துள்­ளார்கள். 1990 இல் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் விரட்­டப்­ப­டும்­வரை அவர்கள் தங்கள் வாழ்­வி­டங்­களைக் கொண்­டி­ருந்­துள்­ளார்கள்.

கே: 2012 ஆம் ஆண்டு வன பிர­தே­ச­மாக பிர­க­டனம் செய்­யப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக மக்­களால் சமூக பிரதிநி­தி­களால் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்­லையா? 
பதில்: இந்த பிர­க­ட­னமும் மக்­க­ளுக்குத் தெரி­யாமல் அவர்கள் அறி­யாது அவர்­க­ளுக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­டாதே அறி­வித்தல் செய்­யப்­பட்­டது. அப்­ப­கு­தியில் வாழும் மக்­களைக் கலந்­து­ரை­யா­டாது பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் சட்­ட­வி­ரோ­த­மா­னது. இதனை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாக குறிப்­பிட்டு இல்­லாமற் செய்ய வேண்­டு­மென அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனின் சார்பில் ஆப்தீன் அசோ­சி­யேசன்ஸ் எனும் சட்ட நிறு­வனம் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­துள்­ளது. இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கப்­பட வேண்­டு­மென நீதி­மன்­றிடம் கோரப்­பட்­டுள்­ளது. வழக்கு நிலு­வையில் உள்­ளது.

கே:  வில்­பத்து பிர­தே­சத்தில் முஸ்­லிம்­களின் குடி­யேற்றம் சட்­டத்­துக்கு முர­ணா­னது என சூழ­லி­ய­லாளர் குழு­வினர் தெரி­விக்­கின்­ற­னரே?
 சூழல் நீதிக்­கான அமைப்பும் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்­துக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­துள்­ளது. என்­றாலும் மீள் குடி­யேற்­றங்கள் சட்ட ரீதி­யா­கவே நடை­பெ­றுள்­ள­தாக சட்­டமா அதிபர் எழுத்து மூலம் தெரி­வித்­துள்ளார். இதி­லி­ருந்து எந்­த­வொரு மீள் குடி­யேற்­றமும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தல்ல என்று சட்­டமா அதிபர் தெரி­வித்­துள்­ளதால் 2012 ஆம் ஆண்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் தவ­றா­னது என உறு­தி­யா­கி­றது. வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை.
கே:  முசலி பிர­தேச செய­லகப் பிரிவில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் மக்கள் வெளி­யேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்பு அதா­வது 1990 ஆம் ஆண்­டுக்கு முன்பு எவ்­வ­ளவு பேர் இருந்­துள்­ளார்கள்? 
1981 ஆம் ஆண்டின் சனத்­தொகை கணக்­கெ­டுப்பின் படி சுமார் 30 ஆயிரம் பேர் வாழ்ந்­துள்­ளார்கள். 1990 ஆம் ஆண்டு முசலி செய­லக பிரிவில் வாழ்ந்த மக்­களில் 84.0 வீத­மானோர் முஸ்­லிம்கள், 13. 4 வீத­மானோர் தமி­ழர்கள், 2.6 வீத­மானோர் சிங்­க­ள­வர்­க­ளா­வார்கள்.

கே:  மீள் குடி­யேற்­றப்­பட வேண்­டிய முஸ்­லிம்­களில் எத்­தனை விகி­தத்­தினர் மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள்? 
முஸ்­லிம்­களில் 20 வீத­மானோர் மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள். மேலும் 80 வீத­மானோர் குடி­யேற்­றப்­பட வேண்­டி­யுள்­ளனர்.

கே:  2017 ஆம் ஆண்டின் மாவில்லு பேணற்­காடு என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பிர­தே­சத்தில் மக்கள் குடி­யி­ருக்­கி­றார்­களா? 
ஆம். குடி­யி­ருக்­கி­றார்கள். மக்­க­ளுக்கு காணி உறு­திகள், காணி அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் இருக்­கின்­றன. இவை கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாது அவ­சர அவ­ச­ர­மாக கசெட் பண்­ணப்­பட்­டுள்­ளது. இதன் பின்­ன­ணியில் இன­வா­திகள் இருந்­துள்­ளார்கள். இவர்கள் ஜனா­தி­ப­தியை தவ­றாக வழி நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு முறை இருக்க வேண்டும். ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவசியம் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென்றால் மக்களுக்கு மாற்றுக் காணிகள், நஷ்டஈடு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

கே: RRT அமைப்பின் செயலாளராக இருக்கும் நீங்கள் சமூகத்துக்கு என்ன செய்தியை கூறுகிறீர்கள்?
முஸ்லிம் சமூகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியையும் நல்லாட்சி அரசினையும் பதவிக்கு கொண்டுவர பங்காளர்களாக இருந்தது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

இது எமது சமூகத்தின் பிரச்சினை. எமது உரிமை, எமது வாழ்விடங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாம் போராட வேண்டும். அரசியல் தலைமைகள் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். இனவாதிகளுக்குப் பயந்து அமைதியாகி விடக்கூடாது என்றார்.