Top News

நகர்புற கழிவுகளினால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியமான நிலை


உலக நகர்களில் தோற்றம் பெற்றுள்ள பாரிய பிரச்சினைகளுள் மிகவும் முக்கிய பிரச்சினையாக தற்காலத்தில் இனங்காணப்பட்டுள்ள ஒன்றுதான் திண்மக்கழிவகற்றலும் அதனுடன் தொடர்புடைய சூழலியல் பிரச்சினைகளுமாகும்.

இவ்வாறான கழிவகற்றல் பிரச்சினைகள் இலங்கையிலும் வியாபித்துக்காணப்படுகின்றன. இலங்கையில் குறிப்பாக நகர்ப்பிரதேசங்களிலேயே இப்பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றன.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 21.4 சதவீதமானோர் நகர்ப்பகுதிகளில் வாழ்கின்றனர்.துரிதமாக அதிகரித்து வரும் சனத்தொகை வளர்ச்சி காரணமாக கழிவுக்பொருட்கள் பல்வேறுபட்ட முறைகளில் சுற்றாடலில் சேர்கின்றன. அந்தவகையில் இவ்வருடம் எற்பட்ட இரண்டாவது பாரிய குப்பைமேட்டு மண்சரிவாக காணப்படும் கொலன்னாவை அனர்த்தம் திண்மக்கழிவுகளின் சேர்க்கையினால் உருவாக்கப்பட்ட குப்பை மேடு சரிவடைந்தமையினால் ஏற்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதலாவது குப்பைமேட்டு மண் சரிவாக கருதப்படுவது எத்தியோப்பியாவில் மார்ச் மாதம் 2017இல் இடம்பெற்று சுமார் 115 உயிர்களை காவுகொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கொலன்னாவை குப்பைமேட்டு மண்;சரிவின்காரணமாக சுற்றுப்புறங்களில் காணப்படும் மக்களின் இருப்பிடங்கள் அழிவடைந்துள்ளதோடு சுமார் 145 வீடுகள் சேதமடைந்துள் து அத்துடன் சுமார் 19 உயிரிழப்புக்கள் இதுவரை பதிவாகியுள்ளது.

கொலன்னாவை குப்பை மேட்டை பொறுத்தவரை அங்கு ஒரு நாளைக்கு 800 தொண் திண்மக்கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. 300 அடி அதாவது 91 மீட்டர் உயரம் கொண்ட இக்குப்பை மேடானது 380 மீட்டர் நீளம் கொண்டு காணப்படுகின்றது. இவ்வனர்த்தம் தொடர்பாக பல கருத்துக்கள் பல தரப்பினரிடமிருந்து முன்வைக்கப்படுகின்றது. 

அரசதரப்பானது மக்களையும் மக்கள் அரசதரப்பையும் காரணம் காட்டுகின்றது.
பொதுவாக அனர்த்தம் இயற்கை மற்றும் மானிடக்காரணிகளால் ஏற்படுகின்றன. கொலன்னாவை பிரதேசத்தில் நீண்டகாலமாக சேர்க்கப்பட்டு வந்த திண்மக்கழிவுகள் அடையல்களாக படையாக்கம் இடம்பெற்று தனித்தனிப்படைகளாக ஒன்றின் மேல் ஒன்றாக கிடையாக தளத்தில் படிந்துள்ளது. இவ்வாறு படிந்து இறுக்கடைந்து காணப்படும் அடையல்கள் பல்வேறு பதார்த்தங்களை கொண்டு காணப்படும். நாளடையில் இதன் அளவும் திணிவும் அதிகரிக்கின்றது.

இவ்வனர்த்தத்துக்கான பௌதிக காரணிகள்

இலங்கையின் தென்மேல் பருவக்காற்றின் மூலம் மே – செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட பருவ மழைவீழச்சிகாரணமாக இங்கு ஈரப்பதன் பெறப்பட்டு பின்னர் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக வானிலை அழிவு செயற்பாடு இடம்பெற்று இக்குப்பை மேடு காணப்பட்டது. இடை அயன ஒருங்கல் வலயம் இலங்கையை ஊடறுத்து அல்லது அண்மித்து நிலைகொண்டிருத்தல் மார்ச் - எப்ரல் மாதங்களின் சிறப்பியல்பாகும்.

இக்காலப்பகுதிகளில் இலங்கையின் நிலத்திணிவுக்கு மேல் சூரியன் உச்சம் கொடுப்பதனால் புவி மேற்பரப்பையும் அதனை அண்மித்துள்ள வளிமண்டலப்படைகளையும் வெப்பமாக்குகின்றது. இதனால் கடும் ஈரக் காற்றுக்கொண்ட மேற்காவுகை உண்டாகின்றது. இப்பருவங்களில் குறிப்பாக வழக்கமான தெளிவான வானத்துடன் நாள் அரம்பித்து படிப்படியாக முகில்கள் தோற்றம் பெறுகின்றன. பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இடிமின்னல்  புயல்காற்று மழையுடன் வானிலை காணப்பட்டு இரவு நேர மழைவீழ்ச்சி அல்லது இடிமின்னல் புயல்காற்று மழையோடு முகில்கள் மறைந்து செல்கின்றன.

இப்பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக இங்கு உலர் நிலையில் காணப்பட்ட அடையல் பாறைகள் மழைநீரை அதிகளவில் உறிஞ்சிக்கொண்டிருக்கின்றது. இச்செயற்பாட்டின் காரணமாக மேற்படைகளின் திணிவு அதிகரித்துள்ளது.

அடையல்பாறைகளுக்கிடையிலான இழைஅமைப்புக்களின் தளர்வு காரணமாக படைகளுக்கிடையிலான உராய்வு குறைவடைந்து திணிவு கூடிய படை கிடைக்கப்பெற்ற மழைவீழச்சியின் கழுவு நீரோட்ட அழுத்த விசை காரணமாக உயர்பகுதிளில் இருந்து வழுக்குகைக்கு உட்பட்டு இவ்வனர்த்தத்தை ஏற்பட்டுள்ளது.

இவ்வனர்த்தத்துக்கான மானிடக்காரணிகள்

இக்குப்பைமேட்டில் வைக்க்கபட்ட தீயானது இவ்வனர்த்தம் ஏற்படுவதற்கான வலுச்சேர்க்கும் காரணியாக உள்ளது. ஏனெனில் பல படைகளையும் பல பதார்த்தங்களையும் கொண்டு காணப்படும் இக்குப்பை மேடானது இலகுவில் தீப்பற்றக்கூடியதாகவும் பதார்த்தங்களுடன் இலகுவில்தா க்கமடையக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இதனால் படைகளுக்குட்பகுதியில் பாரிய உந்துவிசைகள் ஏற்பட்டு படைகள் இலகுவில் விலகுவதற்கான சந்தரப்பங்களை எற்படுத்துகின்றது. இக்குப்பை மேட்டுக்கு தீவைப்பதனால் அதிகளவான புகை சுற்றாடலில் சேர்ந்து சுற்றாடலை மாசாக்கம் செய்வதோடு சுவாசம் சம்மந்தமான நோய்களுக்கும் ஏதுவாக அமைந்து காணப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் வெளியேற்றப்படும் குப்பைகளின் வகைகள்.

• அசேதனக் கழிவுகள்
• சேதனக் கழிவுகள்
• கைத்தொழிற் கழிவுகள்
• விவசாய கழிவுகள்
• மீன்பிடிக்கழிவுகள்
• வர்த்தகக் கழிவுகள்
• உணவுக் கழிவுகள்
• சந்தைப்படுத்தற் கழிவுகள்

மேலும் பின்வரும் அம்சங்களும் இவ்வனர்த்தத்துக்கான காரணங்களாக காணப்படுகின்றன.

• துரிதமான சனத்தொகை வளர்ச்சி
• அதிகரித்த திண்மக்கழிவகற்றல்
• இடப்பற்றாக்குறை
• முறையற்ற திண்மக்கழிவு முகாமைத்துவம்
• போதியளவான ஆளணி இன்மை
• மக்களின் விளிப்புணர்வற்ற நடவடிக்கைகள்

தீர்வுகள்

• குப்பைகளை மொத்தமாக எரிக்காமல் சிறிய சிறிய எரிதொட்டிகளை பயன்படுத்தி அளவுகளாக நாளாந்தம் எரிக்க நடவடிக்கைகள் எடுத்தல். இதன்மூலம் குறைந்தளவான புகை வளிமண்டலத்தில் சேர்கின்றது. மேலும் எரிதொட்டிகள் சீரானமுறையில் புகைவெளியேற்றம் செய்ய துணைபுரிகின்றது.

• முறையான திட்டமிட்ட திண்மக்கழிவகற்றல் முறைமையும் முகாமைத்துவமும்: மாநகரசபையானது அன்றாடம் திட்டமிட்ட வகையில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்வதோடு அதனை சிறந்தமுறையில் முகாமைசெய்தல் வேண்டும்.இதற்காக பல செயற்திட்டங்களை மேற்கொண்டு குப்பைமேடு தொடர்பான நாளாந்த அவதானிப்புக்களை மேற்கொள்ளல்.

• கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் நுட்பம்: திண்மக்கழிவுகளை வகைப்படுத்தி அவற்றை மீள்பாவனைக்கு உட்படுத்தும் நுட்பத்தை ஆரம்பித்து அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தல். உதாரணமாக இலகுவில் உக்கலடையும் திண்மக்கழிவுகளை பயன்படுத்தி மீள்சுழற்சி செய்து இயற்கை உரங்களை தயாரித்தல்.

• மக்களிடையே விளிப்புணர்வை எற்படுத்தல்: மக்களின் விளிப்புணர்வற்ற செயற்பாடு திண்மக்கழிவகற்றல் செயற்பாட்டில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. வீண்விரயம், கண்மூடித்தனமாக திண்மக்கழிவகற்றல் முறைமை என்பன அதிகளவான திண்மக்கழிவுகளின் சேர்க்கைக்கு ஏதுவாக அமைகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தல்.

• கழிவகற்றலில் பொது மக்களையும தனியார் துறையினரையும் பங்குபெறச்செய்தல்:

• வெளிவாரி, மூலதன பயிற்சி உதவிகளை பெறல்

• முறையான மாநகரப் பராமரிப்பு

• அபிவிருத்தி அடைந்த நாடுகளின் திண்மக்கழிவகற்றல் முறைகளை பின்பற்றுதல்
கொலன்னாவை நகரக்கழிவுகளால் ஏற்பட்ட மேடானது அப்பிரதேச மக்களுக்கு ஒரு இடராகவே இருந்து வந்துள்ளது. இந்த இடரானது அனர்த்தமாக மாறும் போது அது மக்களுக்கு பல பிரச்சினைகளை உண்டுபண்ணியுள்ளது. அனர்த்தம் இடம்பெற்ற பின்னரே அதன் பாரதூரங்கள் பற்றி மக்களாலும் ஊடகங்களாலும் பெரிதும் பேசப்படுகின்றது. 'வருமுன் காப்பது சிறந்தது' அந்தவகையில் நகரத்திட்டமிடுதலில் முறையான திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவத்தின் அவசியம் இந்த அனர்த்தத்தின் பின்னர் உணரப்பட்டுள்ளது எனலாம்.

பேராசிரியர் M.I.M. KALEEL,
புவியியற் துறை ,
தென்கிழக்கு பல்கலைக் கழகம்,
ஒலுவில்.

Post a Comment

Previous Post Next Post