Top News

அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் : ஐ.ஒன்றியத்திடம் கிழக்கு முதலமைச்சர்

முசலி மற்றும் மறிச்சுக்கட்டி உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் பூர்விக இடங்கள் அரச வர்த்தமானியினூடாக கையகப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்று  ஆட்சிக்கு வந்த நல்லாட்சி சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில்  செயற்படுவது  எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்,

கொழும்பில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய அரசியல் பொருளாதார தலைமை அதிகாரி போல் கொப்றி மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

 அத்துடன் வடக்கு கிழக்கில்  தொல்பொருள் மற்றும் வனப்பாதுகாப்பு என மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன,கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வனப்பாதுகாப்புக்கும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இராத காணிகள் எவ்வாறு திடீரென முக்கியத்துவம் பெறமுடியும் எனவும் கிழக்கு முதல்வர் கேள்வியெழுப்பியதுடன் அது தொடர்பிலும் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

 பொதுமக்கள் பாரம்பரியமாக வாழந்து வந்த காணிகள் மற்றும் அவர்களது பூர்விக  விவசாய நிலங்கள் என்பன  கையகப்படுத்தப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

 இதேவேளை   சம்பூர்  மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் மீள்குடியறே்றத்தை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதுடன் இதன் போது வீடுகள் வழங்க வேண்டிய தேவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வர வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் போல் கோட்பிரியிடம் சுட்டிக்காட்டினார்,

 அத்துடன் மக்களை மீள்குடியேற்ற வேண்டிய பல கிராமங்கள் உள்ளதுடன் அவற்றை உடனடியாக செய்ய வேண்டிய தேவையுள்ளதாகவும் சில கிராமங்களில் மக்கள் மீள்குடியேறிய போதிலும் அவர்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்துவருவதனையும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டடினார்,

மாகாண சபைகளுக்கு காணியதிகாரம் வழங்கப்படுமிடத்து அதனூடாக காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் கிழக்கு  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

எனவே சுனாமி மற்றும் யுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஐரோப்புய ஒன்றியம் முன்வரவேண்டுமென கிழக்கு மாாகண முதலமைச்சர் ஐரோப்பிய  ஒன்றிய பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்ததார்.

Post a Comment

Previous Post Next Post