(அகமட் எஸ். முகைடீன்)
சகல இன மக்களும்
ஒற்றுமையாக வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில், இறக்காமம் மாயக்கல்லி மலையில்
புத்தர்சிலை வைத்து பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாட்டால் பயங்கரமான
சூழ்நிலையை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர்
ஆகியோர் காலம் தாழ்த்தாது குறித்த பௌத்த விகாரை அமைப்பதை தடுப்பதோடு
அங்குள்ள சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால்
சிறுபான்மை மக்கள் இவ்வாட்சிக்கு எதிராக திரும்பக் கூடிய நிலை ஏற்படும் என
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (28) பாராளுமன்றத்தில்
உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதி
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பௌத்தர்கள் வாழாத இறக்காமம்
மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரை அமைப்பதற்கு
பொதுபலசேனா உள்ளிட்ட சிலர் முயற்சிக்கின்றனர். இதனால் அம்பாறை மாவட்டத்தில்
உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த
சில தினங்களுக்கு முன்பு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரர் அங்கு
விஜயம் செய்து அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் தனியார் காணிகளை அபகரித்து
பௌத்த விகாரை அமைப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதன்போது அம்பாறை
மாவட்டத்தின் அரசாங்க அதிபர், காணி ஆணையாளர் மற்றும் நில அளவையாளர்கள்
ஆகியோருடன் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து காணிகளை சுவீகரிப்பதற்கான உத்தரவை
பிறப்பித்துள்ளார். இவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?, அரச
அதிகாரிகள் இவரின் உத்தரவை ஏற்று நிலத்தை அபகரிக்க நடவடிக்கை எடுப்பதன்
மர்மம் என்ன?.
இதனால் இன்று அம்பாறை
மாவட்ட மக்கள் கொதிப்படைந்து வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பின்னர்
அம்பாறை மாவட்டத்தில் சகல பள்ளிவாசல் முன்பாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
செய்துள்ளார்கள். இனங்களுக்கிடையே ஒற்றுமையாக இருந்த மக்களுக்கு இடையூறு
விளைவிக்கும் வகையில் சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில்
மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடிவடிக்கைகளை கண்டித்து ஜனாதிபதி மற்றும்
பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட
மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
பௌத்தர்கள்
வாழாத இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரை
அமைப்பது சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் இன்று (28) காலையில்
ஜனாதிபதியை சந்தித்தபோது இது விடயமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக
வாக்குறுதியளித்துள்ளார்.
எனவே கால தாமதமின்றி ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க
வேண்டும். இல்லாத பட்சத்தில் ஞானசார தேரரும் அவருடைய உறுப்பினர்களும் சில
தினங்களில் மீண்டும் அங்கு சென்று பௌத்த விகாரையை கட்ட முற்படுகின்றபோது
பாரிய ஒரு கலவரம் உருவாகும். அது அளுத்கமை கலவரத்தைவிட மோசமானதாக
மாறிவிடும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில்
பொதுபலசேன போன்ற இனவாத அமைப்புகள் தாண்டவமாடியபோது தம்புள்ளை, அழுத்கமை
போன்ற பிரதேசங்களில் பல்வேறுவிதமான இன அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் அவ்வாட்சியில் மக்கள் வெறுப்புற்றிருந்தார்கள். இதன்போது ரணில்
விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தாங்கள் ஆட்சிக்கு
வந்தால் இவ்வாறான பிரச்சினைகளை கட்டுப்படுத்துவோம், அதேநேரம் இவ்வாறான
பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து அடக்குவோம் என்று
வாக்குறுதியளித்தார்கள். அதனை நம்பி சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள்
வாக்களித்து நல்லாட்சியை கொண்டுவந்தார்கள்.
இருந்த
போதிலும் தற்போது சட்டத்திற்கு புறம்பாக, ஆடாவடித்தனமாக செயற்படுகின்ற
ஞானசார தேரரை ஏன் கைதி செய்ய அரசுக்கு முடியவில்லை என மக்கள் கேள்வி
எழுப்புகின்றனர். ஞானசார தேரருக்கு இந்நாட்டில் ஏதும் தனிச் சட்டம்
உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளதா? அவர் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அவரது
தேவையை நிறைவேற்றுவதற்கு அரச அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதன் மர்மம்
என்ன? என்பன தொடர்பில் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் கொதிப்படைந்து
வேறுவகையில் சிந்திக்க தொடங்குகின்றார்கள்.
கடந்த
காலத்தில் பயங்கரவாத சூழ்நிலை காணப்பட்டபோது முஸ்லிம் இளைஞர்கள்
தங்களையும் தங்களது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு பல பாரிய தியாகங்களை
செய்தார்கள். அவ்வாறான இளைஞர்கள் மீண்டும் தங்களுடைய சமூகத்திற்கும்
மார்க்கத்திற்கும் பிரச்சினை வந்திருப்பதனால் தங்களது உயிரைக் கூட தியாகம்
செய்து எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாரான ஒரு நிலமையில் இன்று முஸ்லிம்
இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதன் வெளிப்பாடாகவே இன்று அம்பாறை
மாவட்டத்தில் சகல இடங்களிலும் பரவலாக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.
எனவே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இதனை தீவிரமாக
கவனத்தில் எடுத்து காலம் தாழ்த்தாமல் இறக்காமம் மாணிக்க மடு பிரதேசத்தில்
தனியார் காணியை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதை தடுத்து அங்குள்ள சிலையை
அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த ஆட்சிக்கு எதிராக
சிறுபான்மை மக்கள் திரும்பக் கூடிய நிலமை ஏற்படும்.
அம்பாறை மாவட்டத்தில்
சகல மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இவ்வாறான மாவட்டத்தில் பயங்கர
சூழ்நிலையை தோற்றுவிக்கின்ற சக்திகளை, குறிப்பாக பொதுபலசேன மற்றும் அதன்
பின்னால் நிற்பவர்களை கைது செய்வதற்கு ஏன் முடியாது?. இதனை அரசு கவனத்திற்
கொண்டு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கின்றேன் என பிரதி
அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.