வைரஸ் தொற்று காரணமாக கட்டார் மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கட்டார் வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.அவ்வாறான வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சின் அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை எனவும் ஊடகங்களே மத்திய மாகாணத்தில் H1N1 வைரஸ் பரவலுள்ளதாக குறிப்பிடுவதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டார் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையில் புகழ்மிக்க சுற்றுலா தளங்களாக கண்டி உட்பட மலையகத்தில் வேகமாக பரவும் H1N1 தொற்று காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றின் காரணமாக குறித்த மாகாணத்தின் பிரபல பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. இதேவேளை, H1N1 வைரஸ் தொற்று இலங்கையினுள் பரவியுள்ளதனை இலங்கை அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக கட்டார் வெளிவிவகார அமைச்சின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சுகாதார பிரச்சினை சீராகும் வரையில் கட்டார் பிரஜைகள் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment