ஹஜ், உம்ரா ஏற்பாட்டாளர்களாக செயல்படும் சுமார் 200 நிறுவனங்களில் 150 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு தேவையான வசதிகளை வழங்காதது மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவிற்கான விசா அனுமதி காலம் முடிந்தும் அத்தகையவர்களை (Over Stayers) சவுதியிலிருந்து வெளியேற்றத் தவறியதே ரத்திற்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சுமார் 6 மில்லியன் பேர் உம்ராவிற்காக வருகை தந்துள்ளனர் இவர்களில் சுமார் 4,000 பேர் மட்டுமே நாடு திரும்பாமல் இங்கேயே தங்கியுள்ளனர். இது கடந்த பல ஆண்டுகளை விட குறைவான எண்ணிக்கையே, அரசின் பல கட்டுப்பாடுகளாலேயே இது சாத்தியமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரசு யாத்ரீகர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான 2 புனிதப் பள்ளிகளை தேவையான அளவு விஸ்தீரணம் செய்துள்ளது, விமான நிலையங்களை மேம்படுத்தியுள்ளது, புதிய போக்குவரத்து வசதிகளாக பஸ், ரயில், மெட்ரோ சேவைகளை அதிகப்படுத்தியுள்ளது, அல்லாஹ்வின் விருந்தினர்களாக வருகை தரும் ஹஜ், உம்ரா யாத்ரீகர்களை வரவேற்கவும், திருப்பி வழியனுப்பி வைக்கவும் போதிய மனிதவளத்தையும் கொண்டுள்ள நிலையில் ஏஜென்டுகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர மறுப்பதை அனுமதிக்க முடியாது என்று தேசிய ஹஜ், உம்ரா கமிட்டியின் துணைத் தலைவர் அப்துல்லாஹ் பின் ஓமர் காதி அவர்கள் தெரிவித்தார்.
ஹஜ், உம்ரா ஏஜென்டுகள் எதிர்வரும் மே 30 ஆம் தேதிவரை தங்களுடைய உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உரிமம் பெற விண்ணப்பிக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு உரிமம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் முற்றிலும் சவுதியருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் மேலும் 2 மில்லியன் ரியால்களை வங்கி உத்தரவாதத் தொகையாகவும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Source: Saudi Gazette