தமிழர்களுக்கு
“கறுப்பு ஜூலை” என்பதுபோல் முஸ்லிம்களுக்கு “கறுப்பு மே” என்று அழைக்கப்பட்ட
மாவனல்லை இனக்கலவரம் நடைபெற்று இன்று பதினாறு வருடங்கள் பூர்த்தியடைகின்றது.
இது திடீரென நடைபற்ற
ஒரு வன்முறையல்ல. மாறாக மிகவும் திட்டமிட்டவகையில் நடைபெற்றதாகும். அதாவது
மாவனல்லையிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் சிறு சிறு ஆத்திரமூட்டும்
சம்பவங்களாக ஆரம்பித்து 2001.05.02 இல் பாரிய
வன்முறையாக வெடித்தது.
இந்த மாவனல்லை
வன்முறையானது தனது ஆட்சிக் கவிழ்க்க படுவதற்கு பிரதான காரணியாக அமையப்போகின்றது என்று
அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
இந்நாட்டிலுள்ள
முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மேலோங்கியிருப்பது சிங்கள இனவாதிகளுக்கு எரிச்சலை
உண்டு பன்னிக்கொண்டே இருக்கின்றது. முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு
நன்மை என்று சிந்திப்பதனைவிட, பொறாமை உணர்வுடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை
அழிக்க வேண்டும் என்பதுதான் சிங்கள பேரினவாதிகளின் நிலைப்பாடாகும்.
இவ்வாறான சிங்கள பேரினவாதிகள்
என்னும்போது அதில் அரசியல் தலைவர்கள் தொடக்கம் பௌத்த துறவிகளும் அடங்குவார்கள்.
இவர்களாலேயே அப்பாவி சிங்கள இளைஞ்சர்கள் உணர்வூட்டப்பட்டு வன்முறைகளில் களமிறக்கப்
படுகின்றார்கள்.
சிங்கள பேரினவாதிகளினால் 1998ஆம் ஆண்டிலிருந்து மாவனல்லையில் எவ்வாறாயினும் கலவரம்
ஒன்றை ஏற்படுத்தி முஸ்லிம்களையும் அவர்களது பொருளாதாரத்தினையும் முற்றாக அழிக்க
வேண்டும் என்ற முயற்சிகள் அவ்வப்போது இடம்பெற்று வந்தன.
இதன் விளைவுகளினால் 2001 மே மாதம் மாவனல்லையில் பாரியளவில்
தீ பற்றவைக்கப்பட்டது. மகிந்தவின் ஆட்சியில் அளுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில்
முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தூண்டுகோலாக பொதுபல சேனாவின் ஞானசார தேரர்
இருந்தார்.
அதுபோன்று சந்திரிக்காவின்
ஆட்சிக்காலத்தில் கங்கொடவில சோம தேரர் என்பவர் சிங்கள இனவாதக்கொள்கை மூலம்
மாவனல்லை கலவரத்துக்கு தூண்டுகோலாக இருந்தார் என்று கூறப்படுகின்றது.
இதன் காரணமாக
மாவனல்லையில் உள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்குவதன் மூலம்
அவர்களது பொருளாதாரத்தினை அழிக்க முடியும் என்பதற்காக அடிக்கடி திட்டமிட்ட சதிமுயற்சிகள்
அரங்கேற்றப்பட்டு வந்ததுடன் முஸ்லிம்களை வலிந்து சண்டைக்கு இழுக்கும் பல
சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றிருக்கின்றது.
இதற்காக முஸ்லிம்
வர்த்தகர்களிடம் கப்பம் பெறப்பட்டு வந்தது. அத்துடன் மதுபோதையில் பொது இடங்களில்
முஸ்லிம் பெண்களின் பர்தாவினை இழுத்து அவமானப்படுத்தும் சம்பவம்களும் நிறையவே நடந்தேறியது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உரியவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததை
தவிர, அவர்கள் வேறு வழிகளை நாடவில்லை. எனினும், சிங்கள தேசியவாதப் பிடியில் சிக்கியிருந்த சில உள்ளூர்
அரசியல்வாதிகளின் அனுசரனையினலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றமையினால் பொலிஸார் இதற்கெதிராக
நடவடிக்கை எடுக்கத் தயங்கினார்கள்.
சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரே
இவ்விடயத்தில் பின்வாங்கியமையினால், பொலிசார் மீது வைத்திருந்த நம்பிக்கையை
முஸ்லிம்கள் இழந்தார்கள்.
வழக்கமாக மாவனல்லையில் முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று
வந்த சிங்கள காடையர்கள் குழுவினர் 30.04.2001 அன்று இரவு குடிபோதையில்
வழமைப் போன்று முஸ்லிம் கடைகளில் கப்பம் கோர வந்தனர்.
அன்று வியாபாரம் மந்தகதியில் இருந்தமையினால் ஒரு முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் தனது கடையை மூடும் நோக்கில் ஊழியர்களுடன் சுறுசுறுப்பாக இருந்தார். இந்நிலையில், காடயர்கள் குழு ஹோட்டலுக்குள் புகுந்து 100 ரூபா கப்பம் தருமாறு உரிமையாளரிடம் பயமுறுத்தினார்.
இதற்கு உரிமையாளரோ
இன்று
வியாபாரம் இல்லை தர முடியாது என்று கூற, வந்த காடயனில் ஒருவன் கெட்ட வார்த்தை
மூலம் முனுமுனுத்தவாறு 20 ரூபாவை ஹோட்டல் உரிமையாளரின்
முகத்தில் எறிந்து கோல்ட்லிப் சிகரட் ஒன்றைக் கேட்டுள்ளார்.
இதற்கு கோல்ட்லிப் இல்லை பிரிஸ்டல்தான் உள்ளது என ஹோட்டல் உரிமையாளர் கூறவே அதைத்தா என்று கேட்டுள்ளனர். பின்பு சிகரட்டை கொடுத்து விட்டு மீதிப்பணத்தை கொடுக்கும் போது ஹோட்டல் உரிமையாளருக்கு தூஸன வார்த்தைகளால் மீண்டும் ஏசத்தொடங்கினான். அதற்கு காடையர்களைப் நோக்கி ஏன் ஏசுகிரீர் என்று ஹோட்டல் உரிமையாளர் கேட்டுள்ளார்.
இதற்கு அவர்கள் ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கத் தொடங்கியதுடன் அவரை பாதுகாக்க வந்த ஊழியர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கி ஹோட்டலையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
அத்தோடு நிறுத்தி விடாது உரிமையாளரை மாவனல்ல நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இழுத்துச் சென்று அங்கு அவரை கம்பி ஒன்றில் கட்டி வைத்து பெரும் திரளான மக்கள் மத்தியில் அடித்து அவமானப்படுத்தினர்.
வீராப்பான தொனியில் முடியுமாயின் எந்த முஸ்லிமாவது இவனை காப்பாற்றி
அழைத்துச் செல்லு என்று சவால்விட்டதுடன்
அவரின் முகத்தில் கத்தியால் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்
அவரை வைத்தியசாலையில் அனுமதித்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் பெரிதாக
அலட்டிக் கொள்ளவுமில்லை, குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை.
2001 மே முதலாம் திகதி மாலை ஆகியும் பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாள் முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்............................
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது