Top News

ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அட்டூழியம்; 40 பொதுமக்கள் பலி



ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 40 பொதுமக்கள் பரிதாபமாக 
உயிரிழந்துள்ளனர்.

ஈராக் நாட்டில் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது பெருமளவு தங்கள் வசமிருந்த பகுதிகளை அரசுப்படையினரிடம் இழந்து வருகின்றனர். இதனால், தங்களது ஆத்திரங்களை தீர்த்துக்கொள்ள அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துகின்றனர்.

ஐ.எஸ் அமைப்பின் வசமிருந்த பழமையான மொசூல் நகரை ஈராக் ராணுவம் சமீபத்தில் மீட்டது. இதனால், கொதிப்படைந்த அவர்கள் நேற்று பாக்தாத் நகரில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் பார்லர் அருகே வெடிகுண்டுகள் நிரம்பிய காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

ரமலான் மாதம் என்பதால் அதிக அளவிலான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 17 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 32 பேர் படுகாயங்களுடன் 
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு தாக்குதல் ஷவாகா பகுதியில் உள்ள அரசு அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த கோர தாக்குதலில் 19 பேர் பலியாகினர் மற்றும் 39 பேர் படுகாயமடைந்தனர். இந்த இரு தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பின் தற்கொலைப்படை இத்தகைய தாக்குதலை நடத்தியது என அவர்கள் இணையதளம் வழியாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், அரசுத்தரப்பில் இந்த தகவல் உறுதிசெய்யப்படவில்லை. புனித ரமலான் மாதம் என்பதால் முக்கிய நகரங்களில் மாலை நேரத்தில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை அறிந்த தீவிரவாதிகள் இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

THANKS MAALAIMALAR
Previous Post Next Post