சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் குறிக்கும் பல்வேறு மே தினங்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் ஒரு நிகழ்வாகவே இது பொதுவாக அறியப்பட்டாலும்; சமகால இலங்கையில் இது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவப்பட்டிருக்கும் ஒரு நிகழ்வாகவும் மாறியிருக்கின்றது. அந்தவகையில் இவ்வருட மே தினமானது இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்கள் குறித்து அக்கறை செலுத்தும் அதே சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொதுப் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் இன்றைய சூழ்நிலையில் எதிர்நோக்கும் பாரிய சவால்களை எதிர்கொள்வதற்கான உபாயமார்க்கமொன்றினை முன்மொழியவேண்டிய தேவையினையும் அது வலியுறுத்தி நிற்கின்றது.
“புதிய அரசியலமைப்பு மாற்றம்” துரிதமாக இடம்பெறல் வேண்டும் என்ற கருத்தை சிறுபான்மை மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இம்மேதின நிகழ்வில் மிகவும் அழுத்தமாக இலங்கை அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் முன்வைக்க வேண்டும். அது மாத்திரமன்றி இலங்கையின் சிங்கள, தமிழ் முஸ்லிம் சமூகங்கள் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காகவும் எமது மக்களின் நிரந்தர அமைதி, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி போன்றவற்றிற்காகவும் அரசியலமைப்பு விடயத்தில் நாம் எல்லோரும் இணைந்து செயற்படவேண்டிய தேவையோடு இருக்கின்றோம்.
குறிப்பாக வடக்குக் கிழக்கில் வாழ்கின்றன தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்கிடையே புரையோடிப்போயிருக்கின்ற பகைமை உணர்வுகளையும், விரோதமான குரோதமான எண்ணங்களையும் நீக்கி சகோதரத்துவத்தோடும், சகவாழ்வு எண்ணத்தோடும் ஒருமைப்படுவது குறித்தும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம், வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களிலே நாம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் ஒத்த தன்மையுடையனவாகும், அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கான உபாய மார்க்கங்களும் ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் எமக்கிடையிலான முரண்பாடுகள் அவற்றைத் தீர்ப்பதற்குத் தடையாக இருக்கின்றன. இதனை நாம் புரிந்து செயற்படுவது சிறப்பானது.
வடக்கை விடவும் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவானது சீரானதாக இல்லை என்பதை நாம் அறிவோம், அங்கு சமபலத்தோடு மூன்று சமூகங்களும் வாழ்கின்றன, எனவே முரண்பாட்டிற்கான வாய்ப்புகளைத் தேடும் மனோநிலையே அங்கு மிகைத்திருக்கின்றது. உடன்பாடுகளையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கும் வாய்ப்புகள் குறித்து அங்கிருக்கும் சமூகங்கள் மனந்திறந்து சிந்திக்கவேண்டும். அதுவே ஆரோக்கியமானதாகவும், பிராந்தியத்தின் நிரந்தர அமைதிக்குமான வழிகளை உருவாக்கும்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களினால் நடாத்தப்படும் நிர்வாகங்களிலே “நிர்வாக ரீதியான அடக்குமுறைகள்” காணப்படுகின்றன என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்துகின்றார்கள், காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று குற்றம் சுமத்துகின்றார்கள், அதேபோன்று தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களினால் நடாத்தப்படுகின்ற அரசியல் அதிகாரங்களிலே “அரசியல் அதிகார அடக்குமுறை” நிலவுவதாக குற்றம் சாட்டுகின்றார்கள். அபிவிருத்தி நடவடிக்கைகளிலே பாரபட்சம் இருப்பதாகச் சொல்கின்றார்கள், இன ரீதியான ஒடுக்குமுறைகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்கள். இவ்விரண்டு நிலைகளும் ஆரோக்கியமானதல்ல, இவை குறித்து இரண்டு சமூகங்களின் பிரதிநிதிகளும் மனம்விட்டுப்பேசி பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும். அதேபோன்று வடக்கிலும் தமிழ் முஸ்லிம் உறவு நிலையில் இன்னோரன்ன குறைபாடுகள் நிலவவே செய்கின்றன இவற்றைச் சீர்செய்வதற்கு இதயசுத்தியோடு கூடிய முயற்சிகள் முன்னெடுக்கப்படல் அவசியமாகும்.
எனவே இன நல்லிணக்கம் சார்ந்த விடயங்களிலே வடக்குக் கிழக்கு மக்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்ற செய்தியை இம்மேதினத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.