ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்களில் ஒருவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸின் தந்தை ஹபீப் முஹம்மத் அவர்களின் மறைவு கட்சிக்கும் சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஹபீப் முஹம்மத் அவர்களின் மறைவையொட்டி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியான இவர், கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். அவரின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவர். தன்னுடைய வீட்டை கட்சியின் அலுவலகமாக பாவிப்பதற்கு கொடுத்துதவிய ஒரு பெருந்தகை.
கல்முனை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த தொழிலதிபரான இவர், நீண்டகாலமாக கல்முனை முஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவராக பணியாற்றியிருக்கிறார். கொடைவள்ளலான இவர், பல்வேறு தரப்பினர்களுக்கும் தன்னாலான உதவி செய்துவந்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகாலப் போராளியான ஹபீப் முஹம்மத் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அன்னாரின் பாவங்களை மன்னித்து, மறுமை நாளில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனம் கிடைப்பதற்கு நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக!
அன்னாரின் பிரிவினால் துயருறும் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தனது சார்பாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.