நின்று கொல்லும் நல்லாட்சி.......
அன்பார்ந்த முஸ்லிம் அமைச்சர்களே,பாராளுமன்ற உறுப்பினர்களே , மாகாண சபை அமைச்சர்களே மற்றும் உறுப்பினர்களே .....
நல்லாட்சி ஏன் உருவாக்கப்பட்டது ?
கடந்த ஆட்சியின் சொல்லொனா துயரங்கள் முஸ்லிம்களை வதைத்த போது மக்களே அவ்வாடசியில் வெறுப்புக்கொண்டு அவ்வாடசியும் அவ்வாட்சித்துனபங்களும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று செயற்படுத்திய வேளையில் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்தே நீங்கள் சார்ந்த கட்சிகளால் செய்வதற்கு வழியின்றி மனம் மாறி இந்நல்லாடசி என்று சொல்லப்படும் ஆட்சிக்கு ஆதரவளித்து நீங்கள் பட்டம் பதவிகளை பெற்றீர்கள்!
கடந்த ஆட்சியில் நாம் பெற்ற அனுபவங்கள்!
பிரதானமாக மாரக்கத்தை பினபற்றுதலிலேயே தடைகள் ஏற்படுத்தப்பட்டது.
பொருளாதாரம் சூரையாடப்பட்டது உயிர் அச்சுறுத்தல்கள் ஏவி விடப்பட்டிருந்தது காணி மற்றும் சொத்து அபகரிப்புக்கள் அன்றாட நடவடிக்கைகளாக்கப்பட்டிருந்தன. அறியாததோர் அச்சநிலைக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் உள்ளாக்கப்பட்டிருந்தது. இன்னும் எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம்.
இனவாதம் நிறுத்தப்பட்டுவிட்டதா?
கடந்த ஆட்சியில் திரைமறைவில் ஓடிக்கொண்டிருந்த இனவாதம் அங்கிகாரம் வழங்கப்பட்டு அரசாங்க அனுசரணையுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேளையிது. நீதி சமமாக நிலைநாட்டப்படவில்லை. இனவாதம் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு சக்தி பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி நிரல் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்தால் Bபனயை தவிர வேறொன்றுமே எம் காதில் ஒலிக்கும் தூரம் வெகு தொலைவிலில்லை.
என்ன நன்மை அடைந்தோம்?
அடைந்த நன்மைகள் ஒப்பீட்டளவில் பெரிதாக ஒன்றுமில்லை. கடந்த ஆட்சியில் ஊழல்கள் இடம்பெற்றிருந்தாலும் இன்று எல்லோரும் அனுபவிக்கும் மற்றும் காணப்படும் அபிவிருத்திகள் அவர்களுக்கு சொந்தமானதே!
இனியும் இவ்வாடசி பதவி அலங்கரிப்பு தேவைதானா?
எந்த நோக்கத்திற்காக இவ்வாட்சி கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்தில் மக்கள் எதிர்ப்பார்த்த எந்த ஒன்றுமே இதுவரைக்கும் ஆரம்பிக்கப்படவுமில்லை, செயல்படுத்தப்படவுமில்லை. புதிய ஆட்சியின் இரண்டு வருடங்களை கடக்கப்போகிறோம். மக்கள் கண்ட பலன் ஏதுமில்லை. மாறாக வீரியமடைந்த துன்பங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவாதமும் மன உளைச்சலகளுமே எஞ்சியிருக்கிறன.
ஒருமித்து குரல் கொடுப்பது எப்போது?
மக்கள் பிரதிநிதிகள் நீங்கள் மக்களுக்காக ஒருமித்த குரலாக எப்போது ஒலிப்பீரகள்? உங்களை அலங்கரிக்கும் பதவிகளும் அதிகாரங்களும் உங்களது சுகபோக வாழ்ககைக்கானதல்ல என்பதை ஞாபகமாக வைத்துள்ளார்களா? எந்த வகையிலாவது உங்களால் மக்கள் பயனடைந்துள்ளார்களா? உங்களது மனசாட்சியை தட்டிக்கேளுங்கள்! நீங்கள் நிம்மதியாக உறங்குகிறீரகள் என்றால் மக்களின் எந்த ஒரு குரலும் உங்களை உங்கள் மனசாட்சியை தட்டவில்லை என்றாகிவிடும்.
இவ்வாறு மக்களின் அபிலாசைகள் ஒன்றுக்குமே செவிசாய்ககாத, பயன்படாத ஆட்சியிலும் அதிகாரத்திலும் ஏன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறீரகள்? உங்கள்சுகபோகம் தொலைந்து போகும் என்ற அச்சத்திலா?
பதவிகளை துச்சமென மிதித்து வீசி எறியுங்கள்!
மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவற்றை உங்கள் எதிர்ப்பாக வெளிப்படுத்திக்காட்டுங்கள்! உங்களோடு என்றென்றும் இம்மக்கள் பின் தொடர்வார்கள், இல்லையேல் தூக்கிவீசிய ஆட்சியை சமரசம் செய்து மீண்டும் கொண்டுவருவதற்கு மக்களுக்கு தெரியாமலில்லை. அந்நேரத்தில் நீங்களும் தொலைக்கப்பட்ட பட்டியலில் இருப்பீர்கள்!
புத்தியுள்ள பிள்ளைக்கு செவ்வரத்தம்பூ நஞ்சன்று!
Dr அப்துல் ரஷாக் AC
Dr அப்துல் ரஷாக் AC