Top News

அகீதா மோதல்களில் ஈடுபடும் இளைய சமூகமே சற்று நிதானமாகச் செயற்படுங்கள்!



கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை உயிரை விட மேலாக நேசிக்கும் என் சமூகத்தாரே அல்லாஹ் உங்களை ஆசிர்வதிப்பானாக.
இலங்கை முஸ்லிம்கள் வடக்கிலிருந்து
வெளியேற்றப்பட்டபோது நாம் அகதிகளானோம். ஆனால் அப்போது நம்மை யாரும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவில்லை.
நமது உடமைகள் காெள்ளை அடிக்கப்பட்டபோது நாம் இறைவனிடமே பாரம் கொடுத்தோம். நாம் தீவிரவாதிகளாக மாறவில்லை. ஏனெனில் இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை.
ஆனால் இனி வரும் காலம் எம்மீது அபாண்டமாக சில அடை மொழிகள் சூட்டப்படலாம்.
போர்த்துக்கேயர் காலம் தொடங்கி அந்நியர்களின் சதிகளாலேயே நமது இருப்பு இங்கே அச்சுறுத்தலுக்கு உள்ளானது.
உதுமானிய சாம்ராஜ்யத்தை என்று நாம் இழந்தாேமோ அன்றிலிருந்து நாம் பிரித்தாளப்படுகிறோம்.
ஆசியா தழுவிக் கொண்ட ஜனநாயகமோ மத்திய கிழக்கு மணந்து கொண்ட மன்னராட்சியோ முஸ்லிம்களுக்கு நிம்மதியைப் பெற்றுத்தரவில்லை.
அரசியல் முரண்பாடுகளும் அகீதா மோதல்களும் இளைய சந்ததியினரைச் சீரழித்துவிட்டன. சகிப்புத்தன்மையற்ற புத்திக்கூர்மையை இழந்த ஒரு தலைமுறை எம்மத்தியில் திட்டமிட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது.
இஸ்லாமிய கிலாபத் உயிராடு இருக்கும்போது உலகளாவிய இஸ்லாமியக்கட்டமைப்பு அமுலில் இருந்தது. அதன் சட்டம் நடை முறையில் யதார்த்தமாகப் பின்பற்றக்கூடியதாக இருந்தது.
ஆனால் கிலாபத்தின் சரிவுக்குப் பின்னர் கட்டமைப்பினை புறந்தள்ளிய ஷரீஆ தொடர்பாகவே வாதங்கள் தொடர்ந்தன.
இந்த நிலையில்தான் ஜிஹாத் தொர்பான அரைகுறை வியாக்கியானங்கள் முன் வைக்கப்பட்டன.
இவற்றில் மேற்குலகிலிருந்து இறக்குமதியான வியாக்கியானங்கள் பல முஸ்லிம் அறிஞர்களின் ஊடாகவே கடத்தப்பட்டன.
இவ்வாறு உருவாக்கப்படுவதைத்தான் உட்செலுத்தப்பட்ட பயங்கரவாதம் என்கிறோம்.
இனிமேல் இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொள்ள நேரிடும் இந்த நூற்றாண்டின் சவால் இதுதான்.
நீங்கள் சித்தரிக்கப்பட்ட அடிப்படைவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சிந்தனையாளராக இருந்தால் சர்வதேச பிராந்திய பொறிமுறைகள் இலகுவாக உங்களை பயங்கரவாதி என்று முத்திரை குத்தும்.
இன்று முகநூலில் தயவு தாட்சண்யம் இன்றி அகீதா மோதல்களில் ஈடுபடும் இளைய சமூகமே சற்று நிதானமாகச் செயற்படுங்கள்.
உங்களை நீங்களே காப்பாற்றியாக வேண்டும்.
இயக்கம் வளர்ப்பவர்களால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் தரமுடியாது. அரசியல்வாதிகளாே தேர்தல் வணிகத்தில் திளைத்திருப்பார்கள். காலம் நீங்கள் நினைக்கும் கட்டுப்பாட்டில் இல்லை.
Previous Post Next Post