தெற்காசிய நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்பான அபிவிருத்தியை அடைந்திருக்கின்றன. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த கடல்சார் அபிவிருத்தியை அவசியம் கவனத்திற்கொள்ள வேண்டும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தெற்காசிய நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்பான அபிவிருத்தியை அடைந்திருக்கின்றன. இதன் காரணமாக தெற்காசிய பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தகத்தை பெருமளவில் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. இருப்பினும் குறித்த செயற்பாடுகளுக்கு தெற்காசிய நாடுகளில் உள்ள துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகள் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கின்றது.
கொள்கலன்களை கையாளும் பணியில் உயர்வான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சில நாடுகள் முயற்சித்துள்ளன. இருப்பினும் பொதுவாக இந்த நடவடிக்கைகளில் தாமதங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கொள்கலன்களை கையாளும் துறைமுகங்கள் உயர்வான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆனாலும் கடல்சார் அபிவிருத்தியை அவசியம் கவனத்திற்கொள்ள வேண்டும். ஏனெனில் அபிவிருத்திக்கு அனைத்து துறையிலிருந்தும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அபிவிருத்தியில் ஒரு துறை அதிகம் தாக்கம் செலுத்துமாயின் மற்றைய துறைகள் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும். இதனை தெற்காசிய நாடுகள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏனைய பிராந்தியங்களை விட தெற்காசிய நாடுகளின் பொருளாதார பங்களிப்பு அவசியமானதாக இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.