முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக நடந்தேறும் அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. எனவே நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் மிகுந்த பங்காற்றிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது எப்போதுமில்லாதவாறு இனவாதம் கரைபுரண்டோடுகிறது. முஸ்லிம்கள் மீது மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த அசம்பாவிதங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் முறையிடப்பட்டுள்ளது. எனினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவிக்கின்றனர். எனினும் அவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் முன்னாள் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டி நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.
ஆகவே தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்புக்கூற வேண்டும். குறித்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கமுடியாது போனால் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் உறுப்பினர்களும் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து மாற்று நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
அல்லாதுபோனால் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மிக இக்கட்டான நிலையை அடையும். அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் சில தினங்களில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது. முஸ் லிம்கள் சுதந்திரமாக அம்மாதத்தில் தமது மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.