Top News

மே தினக் கூட்டம் முஸ்லிம்களுக்கு சொன்ன செய்தி என்ன?

 
 
மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இனவாதியாக காட்சிப்படுத்தி ஆட்சியைப் பறித்த நல்லாட்சி அரசாங்கம் தோல்வி கண்டு நிற்கிறது. மைத்திரிபால ஸ்ரீசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்திற்கும் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்திற்கும் வருகை தந்த ஆதரவாளர்களை காட்டிலும்  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்களே அதிகமாகும்.

இம்மூன்று தலைவர்களில் யாருக்கு மக்கள் செல்வாக்கும் ஆதரவும் அதிகம் என்ற பலப்பரீட்சையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனேயே மக்கள் இன்றளவும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், என்பதும் நல்லாட்சி நம்பகத்தன்மை உடையதல்ல, என்பதை பறைசாட்டுமுகமாக இன்றைய கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் மஹிந்தவை ஆதரித்து காலிமுகத்திடலில் ஒன்று கூடினர். இதிலிருந்து முஸ்லிம் சமூகம் ஒரு விடயத்தை மிக நுணுக்கமாக ஆராய வேண்டிய தேவையுள்ளது.


அடுத்து ஏதாவது ஒரு தேர்தல் நடைபெறுமானால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெருந்திரலான மக்கள் ஆதரவுடன் தனித்து நின்று வெற்றி பெருவார் என்பதாகும், உண்மையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இனவாத செயல்பாடுகள் மூலமாக மஹிந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தி தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் மஹிந்தவை இனவாதியாக காட்சிப்படுத்தி தமிழ்,முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை சுவீகரித்துக் கொண்டவர்கள். சாயம் வெழுத்துப் போனதன் விளைவாக இன்று தோல்விகண்டு நிற்கிறார்கள்.

இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைப்போம் என்று சபதம் இட்டவர்கள் சிறுபான்மையர் சமூகத்தின் கழுத்தை ஈரத்துணி போட்டு இறுக்கியதால் இன்று செல்வாக்கு இழந்து மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியும், பிரமரும் தமது அரச இயந்திரங்களை பயன்படுத்தி அதிகபடியான மக்களை திரட்ட முட்பட்ட போதிலும் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவிடம் இப்படி அவமானப்படுவதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஆதரவை இழந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருமுன்னர் சிங்கள மக்கள் மத்தியில் கொடுத்த பல வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியும் நிறைவேற்ற தவறியமை, விலைவாசி, சமூகங்களுக்கிடையிலான பிரிவினைவாதம் என்பவற்றின் மூலமாக சிங்கள  மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து காணப்படுகிறார்கள்.

கடந்த காலங்களில், மஹிந்த அரசாங்கத்தின் போது இவ்வாறாக மஹிந்தவுக்கு ஆதரவாக மக்கள் திரண்ட வேளைகளில் (மஹிந்த அரசாங்கம்) தமது அரச இயந்திரத்தை முழுவதுமாக பாவித்து பணம் வழங்கி ஆட்கள் சேர்த்தது என்ற பல குற்றச்சாட்டுகளை இவர்கள் முன்வைத்தார்கள்.  ஆனால் இன்று தாங்கள் அதே அரச இயந்திரத்தினால் கூட மக்களை ஒன்று சேர்த்து காட்ட முடியாத நஷ்டவாளிகளாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தேர்தல் ஒன்று வருகின்ற பொழுது தனிப்பெரும் சிங்கள பெருபான்மை பலத்துடன் மஹிந்த ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதேவேளை முஸ்லிம் சமூகம் மஹிந்தவிடம் இருந்து தூர விளகி நிற்பதால், அல்லது எதிரியாக பார்ப்பதால் முஸ்லிம்கள் எதையும் தனித்து நின்று சாதித்துவிடவும் முடியாது. ஏனெனில் சிறுபான்மை சமூகமான நாங்கள் பெரும்பாலான ஆதரவைப்பெற்ற அரசியல் தலைவர்களுடன் பயணிப்பதற்கு முன்வராத வரையில் எதையும் சாதிக்க முடியாது, என்பதே உண்மையாகும். 

மஹிந்தவின் கடந்த கால ஆட்சியில் முஸ்லிம்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பல தற்போது பொய்ப்பிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இனவாதிகளையும், இனவாதத்தையும் மூலதனமாக கொண்டு அரசியல் செய்யும் இழிநிலை அரசியல் தலைவன் மஹிந்த அல்ல என்பதையும் அதே நேரம் நல்லாட்சியை கொண்டுவருவதாக கூறி சிறுபான்மையர் சமூகத்தை நசுக்கி ஆளத்துடிக்கும் நயவஞ்சர்ககள் யார் என்பதையும் முஸ்லிம் சமூகம் நன்றாக புரிந்து கொண்ட இக்காலகட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய கரங்களை முஸ்லிம் சமூகம் பலப்படுத்த முன்வந்தால் இனவாதத்தை மூலதனமாக கொண்டு ஆட்சியைப் பிடித்தவர்களை ஓரம் கட்டவும் துளிர்விடும் இனவாதத்தை வேரோடு பிடிங்கி வீசமும் சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும் என்பதே யாதார்த்த பூர்வமான உண்மையாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது கரிசணை கொண்டவர்கள் போல் நாடகமாடும் வேடதாரிகளின் பகட்டு வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் முஸ்லிம் சமூகம் தெளிவான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

அஹமட் புர்கான்
கல்முனை
Previous Post Next Post