ARA.Fareel
எமது முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை வடிவமைத்த முன்னோர்கள் சமூகத்துக்கு நல்லதையே செய்திருக்கிறார்கள். இச் சட்டத்தில் ஷரீஆவுக்கு முரணற்ற சில திருத்தங்கள் அவசியம் என்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உடன்படுகிறது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு உலமா சபை தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை அமுல் நடத்தும் காதி நீதிமன்ற நடைமுறையிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். காதி நீதிபதிகளுக்கு உரிய அந்தஸ்து, நியாயமான கொடுப்பனவுகள், வசதிகள் என்பன வழங்கப்பட வேண்டும். காதி நீதிமன்ற முறைமை பலப்படுத்தப்பட்டால் மாத்திரமே சமூகம் உரிய பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இச் சட்டத்தில் காலத்துக்கேற்ப சில திருத்தங்கள் சிபாரிசு செய்யப்பட வேண்டும் என்பதில் உலமா சபை உறுதியாக இருக்கிறது. இதேவேளை , இச் சட்டம் தொடர்பில் மக்கள் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். எனவே சட்டம் தொடர்பில் மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை எதிர்ப்பதாக சிலர் தவறான கருத்துகளை வெளியிடுவது நல்லதல்ல. பெண்களுடைய விவகாரத்தில் காணப்படும் குறைபாடுகளை உலமா சபை கேட்கத் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும்.
பெண்கள் விவகாரத்தில் உலமா சபை கரிசனையுடனே செயற்பட்டு வருகிறது. அவர்களது பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களுக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராகவே உள்ளது. சட்டத்திருத்த சிபாரிசு குழுவின் செயற்பாடுகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
பத்வாவில் காலம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ள முடியும் என்பதைப் போன்று இச் சட்டத்திலும் ஷரீஆவுக்குட்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.