பிரான்சில் போராட்டக்காரர்களின் பெட்ரோல் குண்டுக்கு பொலிஸ் காவலர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் காவலர் ஒருவர் உடல் முழுவதும் நெருப்பால் சூழப்பட்டு உயிருக்கு போராடிய காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
குறித்த சம்பவத்தில் 6 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் கருத்துக்கணிப்பில் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான Marine Le Pen முன்னிலை பெற்றுள்ளதை கண்டித்து போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணி ஒருகட்டத்தில் கலவரமாக உருமாறி பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு பெரிதாக மாறியது.
இதில் கலவரதடுப்பு பொலிசார் ஒருவரின் தலை மீது விழுந்த பெட்ரோல் குண்டு ஒன்று அவரை நிலைகுலைய செய்ததுடன், உடல் முழுவதும் நெருப்பு பற்றிக்கொள்ளும் அளவுக்கு சென்றதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் பொலிஸ் வாகனங்களுக்கு எதிராக தாக்குதலை தொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களில் 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இனவாதம் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு பெயர்போன Marine Le Pen பிரான்ஸ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள்,
ஆயிரக்கணக்கானோர் மீண்டும் பிரான்ஸ் தெருக்களில் இறங்கி போராடவும் நீதிக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் குரல் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.