Top News

தொழிலாளர் நலன்களை மதிக்கிறோமா? மிதிக்கிறோமா?

 
 
 
மே தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதுமே இந்த மே தினம் அல்லது தொழிலாளர் தினத்தின் நோக்கமாகும்.

எனினும் துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் இத் தினமானது அரசியல் கட்சிகளின் பலத்தைக் காட்டுகின்ற தினமாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது. 

பிரதான தேசிய அரசியல் கட்சிகள் நாடெங்கிலுமிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து தமது அரசியல் கட்சிகளின் கூட்டங்களை நடாத்துகின்றனர். இதன்போது தமது கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகளையும் அடுத்த கட்சிகளின் குறைகளையும் கூறி இதனை முற்றிலும் அரசியல் நாளாகவே மாற்றிவிடுகின்றனர். 

உண்மையில் இந்த மே தினக் கூட்டங்களில் பங்குபற்றுகின்ற பொது மக்கள் கூட கட்சிகளின் மீதான பற்றினால் வருகின்றனர் எனக் கூற முடியாது. மாறாக பணத்துக்காகவும் சாப்பாட்டுக்காகவும் மதுபான போத்தல்களுக்காகவும் வருவோரே அதிகமாகும். 

மே தினம் அன்று தொழிலாளர்களை மதிக்க வேண்டிய அரசியல் கட்சிகள் அவர்களை அவமதிக்கின்றன. வெயிலில் நிறுத்தி வைத்து தமது அரசியலுக்காக அவர்களது வியர்வைகளை உறிஞ்சுகின்றன. மொத்தத்தில் தொழிலாளர் தினத்தில் அவர்களது உரிமைகளை கொடுப்பதற்கு பதிலாக பறிக்கின்றனர். இந் நிலை மாற்றப்பட வேண்டும். தொழிலாளர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, முஸ்லிம் சமூகத்தில் மே தினம் பெரிதாக முக்கியத்துவப்படுத்தப்படுவதில்லை. அது பற்றிப் பெரிதாக பேசப்படுவதுமில்லை. எனினும் உலகிலுள்ள மதங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை அதிகம் வலியுறுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாமே. 

"தொழிலாளியின் வியர்வை காயும் முன்னர் அவரது கூலியை கொடுத்துவிடுங்கள்" என்பதுதான் இஸ்லாம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உச்சபட்ச கௌரவமாகும். எனினும் இஸ்லாத்தின் இந்த உத்தரவை முஸ்லிம்களாகிய நாம் எந்தளவு தூரம் நடைமுறைப்படுத்துகிறோம் என்பது கேள்விக்குறியாகும்.

தமது நிறுவனங்களிலோ வர்த்தக நிலையங்களிலோ பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளம் வழங்குவதில் நம்மில் பலர் தவறிழைக்கின்றனர். சிலர் பல மாதங்களாக சம்பளமே வழங்காது ஏமாற்றுகின்றனர். அன்றாட ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு கூட பொருந்திக் கொண்ட பணத்தை வழங்க தவறுகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

அதேபோன்றுதான் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப், முஅத்தின்களின் நிலைமை அன்றாட கூலித் தொழிலாளர்களை விட மோசமானதாகும். மிகக் குறைவான சம்பளத்துடனும் இறுக்கமான நிபந்தனைகளுடனும் பணியாற்ற இவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 

எனினும் கதீப், முஅத்தின்களின் சம்பள விவகாரம் குறித்து நமது சமூகத்தில் அதிகம் பேசப்படுவதில்லை. சமூகப் பிரச்சினைகளை மிம்பரில் பேசுகின்ற கதீப்மாருக்கு அவர்களது பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு கூட அனுமதியில்லை. சம்பளப் பிரச்சினை பற்றிப் பேசினாலே நிர்வாகிகளால் நிந்திக்கப்படுகின்றனர். வேலையை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

எனவேதான் இன்றைய தொழிலாளர் தினத்தில் நமக்காக வாரத்தில் 7 நாட்களும்  இறை பணி செய்கின்ற கதீப், முஅத்தின்களின் உரிமைகள் தொடர்பில் நாம் சிந்திக்கவும் அதன்பால் செயற்படவும் கடமைப்பட்டுள்ளோம்.  

Previous Post Next Post