அம்பாறையில் நிலவும் வறட்சி நிலையினால் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 45 ஆயிரம் ஏக்கர் காணியில் மாத்திரமே நெற்செய்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக பிரதான நீர்ப்பாசனத்தை வழங்கும் இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தில் 07 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடிநீரை கொள்ளளவாக கொண்ட நிலையில் தற்போது 2 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் அடி நீரே உள்ளது.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கையில்,
குறைந்தளவு நீரே சேனநாயக்க சமுத்திரத்தில் உள்ளதால் குடிநீருக்கும் வழங்க வேண்டிய தேவையுமுள்ளது. எஞ்சிய நீரை மாத்திரமே நெற்செய்கைக்கு வழங்க முடியும். அதாவது 42 வீதமான நீரை மாத்திரமே நெற்செய்கைக்கு வழங்க முடியும் என கூறியுள்ளது.
அம்பாறை அரசாங்க அதிபர் துசித பி வணிகசேகர அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இந்த நீர்த்தட்டுப்பாடு காரணமாக 58 வீதமான நெற்காணிகளில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது ஒரு இலட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் இம்முறை விவசாய செய்கை பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த மாவட்டத்தில் உணவுப்பஞ்சமும், குடிநீர்த்தட்டுப்பாடும் நிலவுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில விவசாயக்காணிகளில் மாத்திரம் செய்கையை மேற்கொள்ளலாம் எனக்கூறப்பட்டிருப்பதால் அவற்றுக்குப் பலத்த கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் குத்தகைப் பணமும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.